“உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் பெண்கள் புரட்சி செய்ய வேண்டும் ஆண்களும் பெண்களுமாக வெற்றி பெற வேண்டும் ” என இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பு – வாழைச்சேனை கண்ணகிபுரத்தில் நேற்று மாலை நடைபெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே சேனாதிராஜா இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும்
“ அரசியல் தீர்வு ஏற்படுகின்ற போது மத்திக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்படும் அதே போன்று உள்ளூராட்சி மன்றங்களுக்கு அதிகமான அதிகாரங்கள் பகிரப்படவுள்ளன.
ஊள்ளூராட்சி மன்றங்களுக்கான அதிகாரங்கள் பகிரப்படும் போது உங்களது கிராமங்களின் அபிவிருத்திக்கான திட்டங்களை நீங்களே வகுக்க முடியும்.
வெளிநாடுகளிலிருந்து நிதியுதவிகளைப் பெறவும் மாகாணசபையிடமிருந்து தேவைகளை நிறைவேற்றவும் உங்களது தேவைகளுக்கு ஏற்றவாறு வரிகளை விதித்து அபிவிருத்தி செய்வதற்கான அதிகாரம் கிடைக்கவுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெறுவதற்கு அதிகம் முயற்சிக்கிறார். எங்களிடமிருந்து அடித்துக் கொண்ட பணத்தை செலவு செய்கிறார்.
இந்த நாட்டில் இனப்பிரச்சினை தீர்க்கப்படாததன் காரணத்தினால் இன விடுதலைக்காகக ஆயதமேந்தி போராடி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
எமது பெண்களை மிக மோசமாக நடத்தினார்கள் அதற்கு பொறுப்பேற்க வேண்டிய போர்க்குற்றம் ராஜபக்ஷ மீது சுமத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக தனது செல்வாக்கை நிரூபிக்க இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும்
இந்த நாட்டில் ஆட்சி மாற வேண்டும் என்று நினைத்தவர்கள் தென் பகுதியிலும் உள்ளார்கள் வடக்கு கிழக்கிலும் இருக்கிறார்கள்.
மக்கள் இராஜதந்திர ரீதியாக செயற்பட்டதன் காரணத்தினால் தான் மைத்திரிபால சிறிசேன எமக்கு ஜனாதிபதியாக வந்தார்.
உலக நாடுகளின் ஆதரவு எமக்கு கிடைத்திருக்கின்றது. இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் எமது மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை நம்பிக்கைக்குரியவர்களாக தெரிவு செய்ய வேண்டும.;
எமக்கு எதிராக போட்டியிடுகின்றவர்கள் எம்மை பலவீனப்படுத்தி எங்களது வாக்குப் பலத்தை குறைத்து எமது மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மீது வைத்துள்ள நம்பிக்கையை குறைத்து விட்டால் உலக நாடுகளில் நாங்கள் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை நாங்கள் இழந்து விடுவோம்.
ஆயுத பலத்தோடு போராடிய சந்தர்ப்பத்தை நாங்கள் இழந்திருக்கின்ற போது எங்களுடைய ஜனநாயக பலத்தை நாங்கள் இழந்து விடக் கூடாது.
நாட்டில் ஆட்சியை மாற்றுவதற்கு ஜனநாயக சந்தர்ப்பங்கள் உதவியாக இருந்தன. யாரும் படையெடுத்த இந்த நாட்டை கைப்பற்ற வில்லை சதி செய்து ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை.
தமிழ் மக்கள் தெற்கில் இருந்த சிங்கள மக்களோடு இணைந்து தங்களுடைய வாக்குப் பலத்தின் மூலம் ஆட்சியை மாற்றினார்கள்.
உலக நாடுகளுடன் இணைந்து எமது இனப்பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் சந்தர்ப்பத்தை நாங்கள் இழந்துவிடக் கூடாது. இக் காரணத்துக்காக எதிர் வரும் தேர்தலில் எங்களுடைய மக்கள் பிளவுபட்டு எதிரிகளுக்கு வாக்களிக்காமல் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்” என்றார்.