லசந்த கொலை வழக்கு: முன்னாள் IGP யிற்கு வெளிநாடு செல்ல தடை

229 0

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பான சாட்சிகளை மறைக்க உதவியதாக குற்றம்சாட்டப்பட பொருத்தமானவர்கள் எனக் கருதப்படும் சந்தேகநபர்களான முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன உட்பட முன்னாள் உயர் பொலிஸ் அதிகாரிகள் மூவருக்கு வெளிநாட்டுப் பயணங்களை தடை செய்யுமாறு கல்கிஸ்ஸ மஜிஸ்ட்ரேட் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நேற்று (02) இரவு 10.30 மணியளவில் மஜிஸ்ட்ரேட் நீதிபதியின் உத்தியோகபுர்வ வாசஸ்தலத்தில் கைது செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஆஜர்படுத்தப்பட்ட போதே நீதிபதி இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன தவிர முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார மற்றும் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமந்த அதிகாரி ஆகியோரினதும் வெளிநாட்டு பயணங்களை தடை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு அமைய இந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான சாட்சிகளை அழித்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தின் குற்றப்புலனாய்வுப் பிரிவின் முன்னாள் நிலையப் பொறுப்பதிகாரியும் உப பொலிஸ் பரிசோதகருமான திஸ்ஸ சுகதபாலவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே இந்த பயணத் தடை கோரிக்கையை புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்திடம் விடுத்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரியை எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் இதன்போது உத்தரவிட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரி ஒருவரின் உத்தரவின் பேரில் குறித்த பொலிஸ் அதிகாரிகள் குழு கொலை தொடர்பான சாட்சிகளை அழித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

Leave a comment