52 ஆண்டுகளுக்கு முன் மாயமான குழந்தைகளுக்காக ஆலையை தோண்டும் போலீசார்

277 0

ஆஸ்திரேலியாவில் 52 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போய் தற்போது வரை எங்கே உள்ளார்கள்? என்று தெரியாத 3 குழந்தைகளுக்காக தொழிற்சாலையை போலீசார் தோண்டி வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் இன்றும் ஒவ்வொரு பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை பாதுகாப்பாக வளர்ப்பதற்கு 52 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அந்த சம்பவம் ஒரு காரணமாகும். 1966-ம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ம் தேதி ஆஸ்திரேலியாவின்  தேசிய தினம் மட்டும் அல்ல, ஜிம் – நான்சி தம்பதி தங்களது குழந்தைகளை தொலைத்த தினமும் கூட.

ஜிம் – நான்சி தம்பதிக்கு ஜேன் பியூமண்ட் (9), அர்னா (7) என இரண்டு மகள்களும், கிராண்ட் (4) என ஒரே மகனும் உண்டு. சம்பவம் நடந்த தினத்தன்று நான்சி, தனது மூத்த மகளான ஜேனிடம் சிறிதளவு பணத்தை கொடுத்து அருகிலுள்ள க்ளேனல்க் கடற்கரைக்கு தங்கை, தம்பியை கூட்டிச்செல்லுமாறு கூறிவிட்டு பணிக்கு சென்று விட்டார்.

கடற்கரைக்கு சென்ற மூன்று குழந்தைகளும் இன்று வரை திரும்பவே இல்லை. ஆஸ்திரேலிய போலீசார் மட்டுமல்ல உலகில் உள்ள முக்கிய துப்பறிவாளர்கள், மனோத்துவ நிபுணர்கள், மந்திர தந்திரக்காரர்கள் என பலர் முயற்சித்தும் மூன்று குழந்தைகளும் திரும்பவே இல்லை.

ஹாரி பிலிப்ஸ்

தற்போது 90 வயதை தொட்டுவிட்ட ஜிம் – நான்சி தம்பதிகள் இன்றும் தங்களது குழந்தைகளை எண்ணி கண்ணீர் வடித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், குழந்தைகள் காணாமல் போனது தொடர்பாக அடிலெய்டு நகரைச் சேர்ந்த ஹாரி பிலிப்ஸ் என்பவர் ஒரு புத்தகம் எழுதியிருந்தார். அவர் 2004-ம் ஆண்டே மரணமடைந்த நிலையில், 2007-ம் ஆண்டில் குழந்தைகள் மாயமான வழக்கில் ஹாரி மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

ஹாரிக்கு சொந்தமாக அடிலெய்டில் உள்ள தொழிற்சாலையில் தங்களது இளம் வயதில் குழி ஒன்றை ஏற்படுத்தியதாக இருவர் பரபரப்பு பேட்டியளித்தனர். அவர்கள் கூற்றின் அடிப்படையில் 2013-ம் ஆண்டு அந்த தொழிற்சாலையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். ஆனால், எதுவும் சிக்கவில்லை.

இந்நிலையில், தொழிற்சாலை மொத்தத்தையும் தோண்டி பார்க்க போலீசார் முடிவு செய்து, அதற்கான பணிகளை இன்று தொடங்கியுள்ளனர். ஏற்கனவே பல முறை குழந்தைகள் கொலை செய்து புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதி பல இடங்களில் போலீசார் குழி தோண்டி சோதனை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment