அரசியல் வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது விடுதலை ஆன நிலையில், வரும் அதிபர் தேர்தலில் களமிறங்க உள்ளதாக மாலத்தீவு முன்னாள் அதிபர் முகம்மது நசீத் கொழும்புவில் தெரிவித்துள்ளார்.
இந்திய பெருங்கடலில் உள்ள மாலத்தீவுகள் நாட்டின் தற்போதைய அதிபர் யாமீன் அப்துல் கயூமை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டதாக முன்னாள் அதிபா் மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும் சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்க திட்டம் தீட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடா்பாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் முகமது நசீது, முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் கடந்த ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
உடல்நலக்குறைவை காரணம் காட்டி பிரிட்டனில் சிகிச்சை பெற முகம்மது நசீது நாட்டை விட்டு வெளியேறினார். பல எதிர்க்கட்சி தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், வரும் அதிபர் தேர்தலில் போட்டியின்றி தேர்வாகலாம் என அதிபர் யாமீன் அப்துல் கயூம் கணக்கு போட்டிருந்தார்.
அவரது கனவை சுக்கு நூறாக உடைக்கும் விதமாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம், அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என நேற்று பின்னிரவில் உத்தரவிட்டது. மேலும், எந்த குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டார்களோ, அது தொடர்பான வழக்கில் எந்தவிதமான நெருக்கடியும் இல்லாமல் நோ்மையான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து நசீத்தின் ஆதரவாளர்கள் நள்ளிரவில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கட்டுப்படுத்த முயன்ற போது, கலவரம் வெடித்தது. இதற்கிடையே, அதிபரிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பை காவல்துறை தலைவர் எடுக்காததால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளர்.
வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஸ்ரீலங்காவில் இருக்கும் முன்னாள் அதிபர் முகம்மது நசீத், அதிபர் தேர்தலில் யாமீனை எதிர்த்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். போட்டியிட்டு இம்முறை கட்டாயமாக வெற்றி பெறுவேன் என நம்பிக்கை உள்ளது.