பிரிட்டனில் முன்னாள் மனைவியை கொலை செய்து உடலை சூட்கேசில் மறைத்துவைத்த இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 18 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனின் லெய்செஸ்டர் நகரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அஷ்வின் தாடியா (51) என்பவர், அவரது மனைவி கிரண் தாடியா (46) மற்றும் இரு மகன்களுடன் வசித்து வந்தார். அஷ்வின் மற்றும் கிரணுக்கு கடந்த 1988-ம் ஆண்டு திருமணமானது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு விவாகரத்தானது.
இருப்பினும் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வேலைக்கு சென்ற மனைவி வீட்டுக்கு திரும்பவில்லை என அஷ்வின் போலீசில் ஒரு புகாரளித்தார். அதற்கு அடுத்த நாளே கிரணின் உடல், அப்பகுதியில் உள்ள ஒரு கால்வாயில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
இதையடுத்து அஷ்வினிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. கடந்தாண்டு ஜனவரி 16-ம் தேதி அஷ்வினுக்கும், கிரணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. இதனால் கிரணின் வாயை பொத்திய அஷ்வின் அவரின் கழுத்தையும் நெரித்துள்ளார். இதனால் மயக்கமடைந்த கிரண் மரணமடைந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அஷ்வின் மரணமடைந்த மனைவியின் உடலை சூட்கேசில் வைத்து மறைத்து எடுத்துசென்று அங்கிருந்த கால்வாயில் சென்று வீசியுள்ளார். அதன்பின் வேலைக்கு சென்ற மனைவி வீடு திரும்பவில்லை என நாடகமாடியுள்ளார். ஆனால் அவர் உடலை எடுத்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி.யில் பதிவாகியிருந்தது. இதையடுத்து அஷ்வினை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், இந்த கொலை வழக்கில் அஷ்வினுக்கு 18 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து லெய்செஸ்டர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.