சசிகலா, தினகரன் ஆதரவாளர்கள் கொலை மிரட்டல்: ஜெ.தீபா புகார்

294 0

சமூக வலைதளம், போன் மூலம் சசிகலா, தினகரன் ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக அதிகாரிகளை சந்தித்து ஜெ.தீபா புகார் மனு ஒன்றை அளித்தார்.

ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா இன்று காலை சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகம் வந்தார். அங்கு அதிகாரிகளை சந்தித்து சசிகலா, தினகரன் மீது புகார் மனு ஒன்றை அளித்தார்.

பின்னர் வெளியே வந்த தீபா நிருபர்களிடம் கூறியதாவது:-

வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருகிறது. இது தொடர்பாக நான் இதுவரை 20-க்கும் மேற்பட்ட புகார்களை போலீஸ் நிலையங்களில் கொடுத்துள்ளேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஜெயலலிதாவின் பிறந்த நாளை கொண்டாட திட்டமிட்டு அதற்கான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறேன். எனது பேரவை சார்பில் தமிழகத்தில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளேன்.

அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறேன். இதை அறிந்து கொண்டு கடந்த சில நாட்களாக எனது பேஸ்புக்கில் சிலர் என்னை விமர்சித்தும், மிரட்டியும் வருகிறார்கள்.

இந்த சுற்றுப் பயணத்தை தடுக்க வேண்டும் என்பதற்காக இது போன்ற செயல்களில் சசிகலா, தினகரன் ஆதரவாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

எனது செல்போன் நம்பரிலும் பேசி கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். கடந்த 1 மாதமாக இது போன்ற மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதை நான் பதிவு செய்து வைத்திருக்கிறேன். மேலும் சில ஆவணங்களுடனும், ஆதாரத்துடனும் புகார் கொடுத்துள்ளேன்.

இது முழுக்க முழுக்க இருவரின் தூண்டுதலின் பேரில்தான் நடக்கிறது. இந்த பிரசார பயணத்தை நடத்த விடக்கூடாது என்பதற்காக எல்லா விதத்திலும் இடையூறு செய்து வருகிறார்கள். இதில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு இல்லை.

தீபா பேரவையில் இருந்து நீக்கப்பட்ட தினகரன் ஆதரவாளர்களும் தொடர்ந்து எனக்கு மிரட்டல் விடுத்து வருகிறார்கள். போயஸ்கார்டனுக்குள் என்னை அனுமதிக்க வேண்டும் என்று புகார் கொடுத்திருந்தேன். அதன் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவற்றின் மீது நடவடிக்கை எடுக்க கோரி தகுந்த ஆதரங்களுடன் புகார் கொடுத்திருக்கிறேன்.

எனது கணவர் மாதவனுக்கும் இந்த பிரச்சனைக்கும் தொடர்பு இல்லை. அரசியல் ரீதியாக எங்களிடையே கருத்து வேறுபாடு இருந்தாலும், குடும்பமாக வாழ்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment