மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் அமைந்துள்ள மூன்றுக்கும் மேற்பட்ட கடைகளில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் வளாகத்தில் அலங்கார பொருட்கள் கடை, புத்தக கடை உட்பட பல கடைகள் அமைந்துள்ளன. இந்நிலையில், நேற்றிரவு அம்மன் சன்னதி நுழைவு வாயில் பகுதியில் அமைந்துள்ள சில கடைகளில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக தல்லாக்குளம், பெரியார் நிலையங்களில் இருந்து ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளில் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
புராதன சின்னங்கள் அமைந்துள்ள பகுதியில் ஏற்பட்ட இந்த தீவிபத்தால் ஆயிரங்கால் மண்டபத்தின் மேற்கூரை சேதமடைந்துள்ளது. கிழக்கு கோபுர வாசலில் உள்ளே பற்றிய தீயை அணைக்கும் பணியில் 50 க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தீவிபத்து காரணமாக கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்னவென்று இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.