2009ம் ஆண்டு மே மாதத்திற்கு 18 ற்குப் பின்னர், தாயக விடுதலையை வென்றெடுப்பதற்கான போராட்ட வடிவம் மாற்றம் அடைந்துள்ள இவ்வேளையில், சிங்கள தேசத்தின் 70வது சுதந்திரதினம் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை 70 ஆண்டுகால துயர் சுமந்த அடக்குமுறை வாழ்வின் குறியீட்டு நாள் ஆகும்.
இரண்டு தேசிய இனங்கள் அந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதனை மறந்து இன அடக்கமுறையின் ஒரு வெளிப்பாடாக தொடர்ந்து சிறிலங்கா இனவாத அரசால் கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கும் சுதந்திர தினத்தை ஒட்டுமொத்த தமிழர்களும் புறக்கணிக்க வேண்டும்.
ஈழத்தமிழ் மக்களின் கறுப்பு நாளாகிய மாசி 4 ஆம் திகதியை முன்னிட்டு இத்தாலி ரோமில் ‘சிறீலங்காவில் எழுபது வருடங்களாக ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் ஈழத்தமிழர்கள்’ என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் சர்வதேச ஈழத்தமிழர் மாநாடு பாரிய திட்டமிடலுடன் இத்தாலிய அரசியல்வாதிகள் மற்றும் இராசதந்திரிகளiயும் இணைத்து ஏற்பாடாகியுள்ளது.
விடுதலைப் போராட்டத்தில் இத்தாலி வாழ் ஈழத்தமிழரும் தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர்களும், தங்களால் முடிந்த பாரிய பங்களிப்புகளை செய்துள்ளார்கள். இன்றும் முனைப்புடன் செயற்பட்டுக்கொண்டுள்ளனர். தமிழர்கள் ஒரு தேசமாக அங்கிகரிக்கப்பட்டு அவர்களுக்கான நிரந்தரமானதும் நியாமானதுமான தீர்வு கிடைக்கும் வரை புலத்திலும் சரி களத்திலும்சரி எமது சனநாயகப் போராட்டம் தொடரும்.
அந்த வகையில் எதிர்வரும் 05.02.2018 திங்கள்கிழமை ‘இத்தாலியின் இதயம்’ என்றழைக்கப்படும் பாராளுமன்ற வளாகத்தை அண்மித்து அமைந்துள்ள ‘தேசிய விடுதி றோமா’வில் இத்தாலியில் பலமாக இயங்கிவரும் மிகப்பெரிய தேசிய கட்டமைப்புகள், மற்றும் இத்தாலிய பொது அமைப்புக்களான ‘சர்வதேச மனித உரிமை மையம்’ லெச்சே, ‘வழக்கறிஞர்கள் ஆணையம்’ லெச்சே ஆகிய அமைப்புக்களுடன் இணைந்து இந்த சர்வதேச ஈழத்தமிழர் மாநாடை நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்மாநாட்டிற்கு இத்தாலிய பாராளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள் அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள், சட்டத்தரணிகள், பேராசிரியர்கள், கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுவதோடு தீர்மானங்களையும் நிறைவேற்ற உள்ளனர்.
மாநாட்டினை முன்னாள் ஐரோப்பிய நாடாளுமன்ற சபையின், இத்தாலிய பாராளுமன்ற பிரதிநிதியும், பாராளுமன்ற ஆணைக்குழு உறுப்பினரும், இத்தாலிய குடியரசின் 17வது சட்டமன்ற செனற்சபை உறுப்பினருமான மேன்மைதகு மதிப்பிற்குரிய MASSIMO CERVELLINI அவர்களும், மற்றும் மனித உரிமை சட்டத்தரணியும், எழுத்தாளரும், இத்தாலி சர்வதேச மனித உரிமை மைய அமைப்பின் தலைவருமான மதிப்பிற்குரிய CASTRIGNANO COSIMO ஆகிய இருவரும் ஆரம்பித்து வைக்க உள்ளார்கள்.
மாநாட்டின் முக்கிய நோக்கங்கள் பின்வருமாறு:
– 70 ஆண்டுகளாக அடக்குமுறைக்கு உள்ளாகும் ஈழத்தமிழர்…
– சிறிலங்காவின் புதிய யாப்பினால் தமிழர்களுக்கு ஏற்படும் பாதிப்பு…
– சர்வதேசத்தைத் தொடர்ந்தும் ஏமாற்றும் சிறீலங்கா இனவழிப்பு அரசு…
– இத்தாலி குடியுரிமை இல்லாத ஈழத்தமிழ் மக்களை ‘சிங்களேச’ என்று அடையாளப்படுத்துவதை இத்தாலி குடிவரவு குடியகல்வு இலாகா நிறுத்துவேண்டும்….
-தொடரும் இனவழிப்பும் காணி அபகரிப்பும்….
– காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதிகள் விடுதலை…
– பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள்…
– சிங்களவர்கள் வாழாத இடங்களில் பௌத்த சிலைகள்…
எமது தாயகம் இராணுவ ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டு, தமிழ் மக்களின் குரல்வளை நெரிக்கப்பட்டுக் கொண்டு இருக்கும் இவ்வேளையில், எம்தேச விடுதலையை வென்றெடுப்பதில், ஒவ்வொரு ஈழத்தமிழரும் உறுதியாக உள்ளோம் என்பதனை நல்லிணக்கம் என்ற பசுத்தோலைப் போர்த்திய சிறீலங்கா பயங்கரவாத அரசிற்கும், இனவழிப்பிற்கு ஒத்த்தாசையாக இருந்த சர்வதேசத்திற்கும் நாம் ஒன்றுபட்டு இம்மாநாட்டின் ஊடாக இடித்துரைப்போம். புலம் பெயர் தேசங்களில் வாழுகின்ற தமிழ் மக்களும் ஒன்றிணைந்து தத்தம் நாடுகளில் நடைபெறுகின்ற இப்படியான நிகழ்வுகளிற்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்கி எமது விடுதலைப் போராட்டத்திற்கு உறுதுணையாக நின்று மேலும் வலுச்சேர்க்க வேண்டுமெனவும் இம்மநாட்டின் ஊடாகக் கேட்டுக்கொள்கின்றோம்.
-தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை,