ஈழத்தமிழர்களாகிய எமது வாழ்வு இருண்டே கிடக்கையில் சுதந்திர தினக் கொண்டாட்டம் ஒரு கேடா என்ற கேள்வி எமது மக்களின் மனங்களை வெகுவாக ஆக்கிரமித்துள்ளது. இந்நிலையில் நிரந்தர மாறுதல் ஏற்படாதவரை இலங்கைத் தீவில் உண்மையான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப முடியாது என்பதே கடந்த கால வரலாறு எமக்கு புகட்டிநிற்கும் பேருண்மையாகும் என வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
பெப்ரவரி-04 என்பது தமிழர்களைப் பொறுத்தவரை கரிநாளாகவே நீடித்து நிலைத்து நிற்குமளவிற்கு கடந்த 70 ஆண்டுகால சுதந்திர இலங்கையின் வரலாறு தமிழர்களின் இரத்தம் மற்றும் சதைத்துண்டங்களால் இட்டு நிரவப்பட்டுள்ளது என்பதை எவரும் மறுத்துரைக்க முடியாது.
அந்நிய ஆதிக்கம் இலங்கைத் தீவில் படரும்வரை தமிழர்கள் தனி இராச்சியங்களை அமைத்து தமது படைபலத்தின் மூலம் தமிழர்களின் மரபுவழித் தாயகத்தையும் தமிழர் இறையாண்மையினையும் பாதுகாத்து வந்ததுடன் இன, மத பேதமின்றி நீதி நெறி தவறாது நல்லாட்சி புரிந்து வந்திருந்தனர்.
அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள் ஒருவர் மாறி ஒருவரின் ஆதிக்கம் இலங்கைத் தீவில் நீடித்திருந்த காலத்தில் மதரீதியான ஒடுக்குமுறைகள் மற்றும் வளச்சுறண்டல் நிலவியிருந்ததே தவிர திட்டமிட்ட உயிர்ப்பறிப்புகள் நடந்ததில்லை. இந்நிலையில், 1948 பெப்ரவரி 04 அன்று, பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் நியாயமற்ற ஆட்சி-அதிகார பொறுப்பு கைமாற்றத்தின் மூலம் சிங்கள தரப்பிடம் கையளிக்கப்பட்ட தருணத்தில் இருந்து சட்டியில் இருந்து அடுப்பிற்குள் விழுந்த கதையாக தமிழர்களின் நிலை மாறியது.
அன்றில் இருந்து இந்தக் கணம் வரை ஈழத்தமிழர்களின் வாழ்வு மென்மேலும் இருண்ட நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது. அறவழியில் எமது உரிமைகளைக் கேட்டு போராடிய போது அடி, உதையும் உயிர்ப்பறிப்புகளுமே இலங்கை ஆட்சியாளர்களின் பதிலுரைப்பாக இருந்தது. இவ்வாறான பின்னணியில்தான் வரலாற்று தன்னியல்பில் தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார்கள்.
ஐக்கிய நாடுகள் சாசனத்தில் வரையறுக்கப்பட்டிருக்கும் சுயநிர்ணய உரிமை வழியே எமது மண்ணினதும் மக்களினதும் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை பாதுகாக்கும் நோக்கில் விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட காலத்தில் தமிழர்களின் மரபுவழித் தாயகத்தின் மீதான திட்டமிடப்பட்ட நில ஆக்கிரமிப்பு முற்றிலும் தடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் இன்று, தமிழர் தாயகத்தினை நிரந்தரமாகவே பௌத்த சிங்கள பேரினவாத சித்தாந்தத்திற்குள் அடிமைப்படுத்தும் திட்டத்துடன் வடக்கு கிழக்கில் 1000 பௌத்த விகாரைகளை அமைப்பதற்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக நல்லாட்சி அரசின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
போர் முடிவுக்கு பின்னர் இனப்பிரச்சினைக்கான தீர்வை கொண்டுவருவோம் என்று கூறிய ஆட்சியாளர்கள் ஆள் மாற்றம் மூலம் தமது பொறுப்புக் கூறல் கடப்பாட்டினை தவிர்த்து தீர்வினை காலம் கடத்துவதிலேயே குறியாக உள்ளார்கள். தமிழர்களை மட்டுமல்ல சர்வதேசத்தையும் தொடர்ந்து ஏமாற்றும் வகையில் அரசியல் குழப்ப நிலையை திட்டமிட்டு அவர்களாகவே ஏற்படுத்தி வருவதை அவதானிக்க முடிகின்றது.
வரும் ஜெனிவா அமர்வானது பெரும் சவாலாக அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவிவரும் நிலையில் தேசிய அரசாங்கமாக உருவாக்கப்பட்டிருந்த நல்லாட்சி அரசில் வேண்டுமென்றே குழப்பத்தை ஆட்சியில் உள்ளவர்கள் திட்டமிட்டு ஏற்படுத்தியுள்ளார்கள். சர்வதேச நாடுகளின் நலன்களுக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் நல்லாட்சி அரசின் உறுதிப்பாட்டை கேள்விக்குள்ளாக்குவதன் மூலம் ஜெனிவா நெருக்கடி நிலையின் வீரியத்தை மட்டுப்படுத்தும் நோக்கிலேயே அண்மைய அரசியல் குழப்ப நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட்டு வருகின்றது.
போர் முடிவுக்கு வந்து ஒன்பது ஆண்டுகளாகிய போதிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் நீதி தொடர்ந்தும் மறுக்கப்பட்டே வருகின்றது. போரின் இறுதி காலகட்டத்தில் எம்மால் இலங்கை இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட எம்மவர்களுக்கு என்ன நடந்தது என்பது கூட இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு போன்ற பிரச்சினைகள் முழுமையான தீர்வு காணப்படவில்லை.
எங்கோ ஓர் மூலையில் அல்ல, தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு பகுதிகளின் ஒவ்வோர் மூலை முடுக்குகளும் நீதி மறுக்கப்பட்டு நிர்க்கதி வாழ்விற்குள் சிறைப்படுத்தப்பட்டுள்ள தமிழர்களால் சூழப்பட்டுள்ளது.
ஆயுதமௌனிப்பின் பின்னணியில் போர் முடிவுக்கு வந்த பின்னர் தமிழர்களின் நிலை சுதந்திர இலங்கையின் ஆரம்ப காலத்திற்கு பின்நோக்கி இழுத்துச் செல்லப்பட்டுள்ளதையே இன்றைய நல்லாட்சி காலத்திலும் நடந்தேறிவரும் நிகழ்வுகள் எடுத்துரைக்கின்றன.
இவ்வாறு ஈழத்தமிழர்களின் வாழ்வு இருண்டே கிடக்கையில் சுதந்திர தினக் கொண்டாட்டம் ஒரு கேடா என விரக்தியின் வெளிப்பாடக எமது மக்களின் மனதில் எழும் கேள்வியை அவ்வளவு எளிதில் புறந்தள்ளிவிட்டு தமிழ் அரசியல் தலைவர்களால் செயற்பட முடியாது என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
2 Attachments