உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் பெப்-10 அன்று தாயகத் தமிழர்கள் வழங்கும் தீர்ப்பானது சுயநிர்ணய உரிமை தமிழர்களின் பிறப்புரிமை என்பதை இடித்துரைப்பதாக அமைய வேண்டும். ஆயுத மௌனிப்பின் பின்னர் சூன்யமாக்கப்பட்டுள்ள தாயக அரசியல்வெளியை மீட்டெடுக்கும் களமாக இத்தேர்தல் களத்தை நாம் பயன்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.
இலங்கைத் தீவின் ஆதி காலம்தொட்டு பூர்வீகக்குடிகளாக வாழ்ந்து வரும் தமிழர்களாகிய எங்களது மரபுவழித் தாயகத்தின் மீதான எமது உரித்தை நிலைநிறுத்தும் உன்னத நோக்கத்திற்காகவே பல்லாயிரக் கணக்கிலான மாவீரர்கள் தமது இன்னுயிரை ஆகுதியாக்கியுள்ளார்கள். அவ் உயரிய இலட்சியம் நோக்கிய பயணத்தில்தான் இலட்சக்கணக்கிலான தமிழ்மக்களும் தமது உயிரைத் தியாகம் செய்துள்ளார்கள்.
சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் விடுதலைபெற்ற தேசத்தில், எதிர்கால சந்ததி சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதற்காகவே அளப்பரிய தியாக வரலாறு படைக்கப்பட்டுள்ளது. அப்பேற்பட்ட உயரிய தியாகத்தின் அடித்தளத்தில் பலம்பெற்று அரசியல் சக்தியாக உருவாக்கப்பட வேண்டிய தமிழ்த் தேசியத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முற்றாக நிராகரித்து சிதைக்கும் வேலையில் செயற்படுகின்றது.
இலங்கைத் தீவு சுதந்திரம் பெற்ற காலம் முதல் இன்று வரை நடைபெற்று முடிந்த தேர்தல் வரலாற்றை எடுத்துப் பார்த்தோமேயானால் ஆட்சி-அதிகார இலக்கு நோக்கியதாக தமிழர்களின் வாக்களிப்பு என்றும் இருந்ததில்லை. மாறாக தமிழர்களின் தன்னுரிமை சார்ந்தே வாக்களிப்புகள் நடந்துள்ளது. ஆயுதமௌனிப்பின் பின்னரான தமிழர்களின் வாக்களிப்புகளும் அவ்வாறே அமைந்திருந்தது என்பதை யாரும் மறக்கவோ மறுக்கவோ முடியாது.
இவ் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பும் முன்னிலும் பார்க்க அதி முக்கியமான களமாக தமிழர்கள் முன் விரிந்துள்ளது. வாக்குரிமை உள்ள ஒவ்வொரு தமிழனும் கண்டிப்பாக வாக்களித்தே ஆகவேண்டியது இன்றியமையாதது ஆகும். இவ்விடத்தில் தான் அவ்வாறு செலுத்தும் வாக்கை யாருக்கு செலுத்துவது என்பது குறித்து தீர்க்கமான முடிவெடுக்க வேண்டியுள்ளது.
தமிழர் தாயகத்தில் அதுவும் தமிழர்கள் மத்தியில் விசேட அதிரடிப்படையுடன் நடமாடுபவர்களுக்கா எங்கள் வாக்கு?
இனவழிப்பு இராணுவத்தின் தமிழர்கள் மீதான வன்மத்தை வெளிப்படுத்திய உடற்பரிசோதனையை, தமது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு வருகைதந்திருந்தவர்களிடத்தே ஆண்-பெண் பேதமின்றி சிறிலங்கா காவல்துறையை கொண்டு கட்டவிழ்த்து விட்டவர்களுக்கா எங்கள் வாக்கு?
உள்ளக சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வுத் திட்டமாக உருவாக்கப்பட்டிருந்த காரணத்திற்காகவே தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் ஒஸ்லோ உடன்படிக்கையை நிராகரித்திருந்தார். தேசியத் தலைவர் அன்று நிராகரித்த உள்ளக சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தீர்வு எட்டப்படும் என்று சம்பந்தன் கூறிவருகின்றார் என்றால் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் பூர்த்தி செய்யப்படுவதைக் காட்டிலும் பெயருக்கு ஒரு தீர்வை பெற்று இனப்படுகொலையாளிகளை காப்பாற்றுவதே அவர்களின் நோக்கமாக இருக்கின்றது. தமிழர்களைப் பொறுத்த வரையில் முள்ளிவாய்க்கால் இனவழிப்பிற்குப் பின்பு உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வு என்ற பேச்சிற்கே இடம் இல்லை. ஆகவே சிந்தியுங்கள் மக்களே இப்படிப்பட்டவர்களுக்கா எங்கள் வாக்கு?
தாயகம்-தேசியம்-தன்னாட்சி உரிமை ஆகிய மூலாதாரக் கோட்பாட்டின் அடிப்படையில் தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளை நிறைவேற்றும் வகையிலான தீர்வை நோக்கி உண்மை-நேர்மை-உறுதியுடன் தாயக அரசியல் வெளியில் செயற்பட்டுவருபவர்களின் சுத்தமான கரங்களைப் பலப்படுத்துவதாக எங்கள் வாக்குகள் மாறவேண்டும்.
நம்பி நம்பி ஏமாந்து போன கசப்பான வரலாறு காற்றோடு போகட்டும். இனியொரு விதி செய்ய பெப்ரவரி-10 அன்று வாக்குச்சாவடி நோக்கி அணிவகுப்போம் வாரீர். நினைத்த மாத்திரத்திலோ, எண்ணிய உடனேயோ மாற்றம் நிகழ்ந்துவிடப் போவதில்லை. நாம் விரும்பும் மாற்றத்தை நமக்கான மாற்றத்தை நாம் தான் ஏற்படுத்தியாக வேண்டும். வாக்களிக்காது இருப்பதும் பெருந்தவறாகிவிடும்.
தென்னிலங்கையுடன் ஒப்பிடும்போது வடக்கு கிழக்கு உள்ளூராட்சி சபைகளுக்குட்டபட்ட பிரதேசங்கள் நாற்பது வருடங்கள் பின்தங்கிய நிலையில் இருக்கின்றன. ஆழிப்பேரலை அழிவுகள் ஏற்பட்டபோது எவ்வாறு சுனாமிக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வெளிநாடுகளில் இருந்து நிதி பெறப்பட்டு பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டதோ அதே போல யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்குப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய விசேட கட்டமைப்பு ஒன்றினை உருவாக்கவேண்டும் என்ற சுத்தமான செயற்திட்டம் யாரிடம் உள்ளதோ அவர்களின் சக்கரங்களைச் சுழற்றுங்கள்.
அன்பான தமிழ்மக்களே! பெப்ரவரி-10 நடைபெறும், தமிழினத்தின் தலைவிதியை நிலைநாட்டும் ஜனநாயகப் போரில் வெற்றி வீரர்களாக வீட்டை விட்டு வெளியேறி விடியல் நோக்கிய பயணத்தில் வீறுநடை போடுவோம் வாரீர். மறுநாள் பொழுது மாற்றத்திற்கான அறைகூவலோடு விடியும் வகையில், தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று தமிழர்களின் நிரந்த விடிவிற்காய் அறவழி நின்று போராடிவரும் தமிழ் மக்கள் பேரவையின் கொள்கைவழி நின்று நேர்மையான அரசியல் முன்னெடுப்புக்களினூடாக தூய கரங்கொண்டு தூய நகரம், தூய கிராமங்களை உருவாக்க வேண்டும் என்ற முன்னெடுப்புகளை மேற்கொள்பவர்களுக்கே உங்கள் வாக்குகளை அளியுங்கள் என்று அன்புரிமையோடு கேட்டுக் கொள்கின்றோம்.