சென்னையில் தற்போது சாதாரண மற்றும் எக்ஸ்பிரஸ் பஸ்கள் 70 சதவீதம் இயக்கப்படுவதாக போக்குவரத்து கழக அதிகாரி தெரிவித்தார்.
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 3400 பஸ்கள் இயக்கப்படுகின்றன. 855 வழித்தடங்களில் புறநகர் பகுதி மக்களை இணைக்கும் வகையில் சென்னையை ஒட்டியுள்ள காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் 48 லட்சம் பயணிகள் பயணம் செய்கின்றனர்.
சாதாரண பஸ்களில் குறைந்த பட்ச கட்டணம் ரூ.5ஆகவும் அதிகபட்ச ரூ.24 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எக்ஸ்பிரஸ் பஸ்களில் அதிகபட்சமாக ரூ.24, டீலக்ஸ் பஸ்களில் குறைந்த பட்ச கட்டணமாக ரூ.12 அதிகபட்ச கட்டணமாக ரூ.50-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கட்டண உயர்வுக்கு பிறகு புறநகர் பஸ்களில் கூட்டம் குறைந்தது.
பயணிகள் இல்லாமல் காலியாக பஸ்கள் ஓடியதால் கட்டண உயர்வு மூலம் எதிர்பார்த்த வருவாய் கிடைக்கவில்லை. இதனால் சாதாரண பஸ்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட டீலக்ஸ் பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு அவை சாதாரணம் மற்றும் எக்ஸ்பிரஸ் சேவையாக மாற்றம் செய்யப்பட்டன.
தற்போது சாதாரண மற்றும் எக்ஸ்பிரஸ் பஸ்கள் 70 சதவீதம் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கட்டண உயர்வுக்கு பிறகு பஸ்களில் கூட்டம் குறைந்துள்ளது. கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு தினமும் ரூ.3 கோடி வருவாய் வந்தது. தற்போது சாதாரண கட்டண பஸ்கள் அதிகளவு இயக்கப்படுவதால் ரூ.2கோடியாக வருவாய் குறைந்துள்ளது.
1300 சாதாரண பஸ்களும், 1200 எக்ஸ்பிரஸ் பஸ்களும், 900 டீலக்ஸ் பஸ்களும் தற்போது இயக்கப்படுகின்றன. அதிகளவு இயக்கப்பட்ட டீலக்ஸ் பஸ்கள் பாதியாக குறைக்கப்பட்டுள்ளன என்றார்.
மாநகர பஸ்களில் பயணம் செய்ய வழங்கப்பட்ட ரூ.1000 மாதாந்திர பாஸ் ஏற்கனவே வாங்கியவர்களுக்கு தொடரப்பட்டு வருகிறது. விரும்பியபடி பயணம் செய்பவர்களுக்கு ஒரு வகையிலான பாசும், அலுவலகம் மற்றும் கல்வி நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு மற்றொரு வகையிலான பாசும் வழங்கப்படுகின்றன.
இந்த 2 மாதாந்திர பாஸ்களும் மாற்றம் செய்யப்பட்டு புதிய கட்டணத்தில் மாற்றி அமைக்க ஆலோசிக்கப்படுகிறது.
புதிய வகையிலான பாஸ் வழங்குவது பற்றி ஒரு சில நாட்களில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது. மேலும் தினசரி பாஸ் வழங்கும் திட்டத்தை ரத்து செய்யவும் அதிகாரிகள் ஆலோசிக்கிறார்கள். ரூ.50 பாசில் நாள் முழுவதும் மாநகர் பஸ்சில் பயணம் செய்யும் திட்டத்தில் நஷ்டம் ஏற்படுவதோடு, முறைகேட்டிற்கும் வழிவகுப்பதால் அத்திட்டம் கைவிடப்படுகிறது என்று அதிகாரி தெரிவித்தார்.