எவன்கார்ட் வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய கோட்டாவின் மனு நிராகரிப்பு

346 0

சர்ச்சைக்குறிய எவன் கார்ட் சம்பவம் தொடர்பான வழக்கில் இருந்து தான் உள்ளிட்ட பிரதிவாதிகளை விடுவிக்குமாறு கோரி, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவால் தாக்கல் செய்யப்பட்ட மனு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. 

தான் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளரால், ஆணைக்குழுவிடம் இருந்து எழுத்து மூல கோரிக்கை பெற்றுக் கொள்ளப்படவில்லை என்று கோட்டாபய ராஜபக்‌ஷ தனது மனுவின் மூலம் கூறியுள்ளார்.

ஆகவே அவ்வாறு வழக்குத் தாக்கல் செய்வது சட்ட விரோதமானது என்றும், அதன் காரணமாக தான் உள்ளிட்ட பிரதிவாதிகளை விடுவிக்குமாறு கோரியும் கொழும்பு நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள வழக்கில் தமது சட்டத்தரணிகள் எதிர்ப்பை வௌியிட்டிருந்தனர்.

எவ்வாறாயினும் இந்த கோரிக்கையை நீதவான் நீதிமன்ற நீதிபதி நிராகரித்து தீர்ப்பளித்ததாகவும், ஆகவே அந்த தீர்ப்பை செல்லுபடியற்றதாக்க கோரியும் மேல் நீதிமன்றத்தில் கோட்டாபய ராஜபக்‌ஷவால் மறுஆய்வு மனுதாக்கல் செய்யப்படது.

இன்று இந்த மனு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது மனுவை விசாரிக்காமல் நீதிபதி தள்ளுபடி செய்ததாக எமது நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

எவன்கார்ட் மெரியட் நிறுவனத்திற்கு மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை நடத்திச் செல்வதற்கு அனுமதி வழங்கியதன் ஊடாக அரசாங்கத்திற்கு 1140 கோடி ரூபா நட்டம் ஏற்படுத்தப்பட்டதாக கூறி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய உள்ளிட்ட 06 பிரதிவாதிகளுக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Leave a comment