நாட்டைத் துண்டாடும் அல்லது பிளவுபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக சிலரால் குற்றஞ்சாட்டப்பட்ட போதிலும் நாட்டை துண்டாடவோ அல்லது பிளவுபடுத்தவோ தான் ஒருபோதும் தயாராக இல்லை என்பதுடன் எவருக்கும் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடவும் இடமளிக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இன்று முற்பகல் பொலன்னறுவை செவனபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொய்ப் பிரசாரங்களிலும் சந்தர்ப்பவாத அரசியல் தந்திரோபாயங்களிலும் இன்று நாட்டு மக்கள் சிக்கிக்கொள்ள மாட்டார்கள் என்பதுடன் நாடு பயணிக்கும் பாதையை அவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இன்று நாட்டிற்கு தேவையாக இருப்பது மன்னராட்சி முறையன்றி மக்களாட்சி முறையே ஆகும் என்பதுடன் இதனையே மக்களும் எதிர்பார்க்கின்றனர் எனத் தெரிவித்த ஜனாதிபதி, அத்தகையதொரு அரசியல் மற்றும் சமூக மாற்றத்தினை நாட்டில் ஏற்படுத்தவே கடந்த மூன்று வருட காலமாக தாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
ஊழல் அரசியல்வாதிகள் இன்று ஒரே குழுவாக இணைந்திருக்கின்றனர் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுடன், அவர்கள் மக்களுக்கு சேவை செய்வதற்காகவோ அல்லது நாட்டை அபிவிருத்தி செய்வதற்காகவோ அன்றி தமது தனிப்பட்ட அபிவிருத்திக்காகவே அதிகாரத்தைக் கேட்கின்றனர் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கும், அதிகார துஷ்பிரயோகங்களைச் செய்து அரச வளங்களை அழிவடையச் செய்யும் அரசியல்வாதிக்கு எதிராக கடந்த ஆட்சி காலத்தில் எதுவித நடவடிக்கைகளும் அப்போதைய தலைவர்களால் மேற்கொள்ளப்படாததுடன், அவற்றைப் பற்றி உரையாட கூட அவர்கள் விரும்பவில்லை என்பதனால் கடந்த ஆட்சிக்காலத்தில் ஊழல், மோசடிகள் அதிகரித்திருந்ததாக ஜனாதிபதி தெரிவித்தார்.
சுகாதார அமைச்சர் என்றவகையில் தான் மத்திய வங்கி தலைமையகத்தில் இடம்பெற்ற அரசாங்கத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளைப் பற்றிய கலந்துரையாடலில் பங்குகொண்டபோது அரசாங்கத்தின் ஊழல், மோசடிகள் தொடர்பாக உரையாடியமையினால், மறுநாள் காலை அலரிமாளிகைக்கு தன்னை அழைத்த முன்னாள் தலைவர் அரசாங்கத்தின் அமைச்சர் என்றவகையிலும் கட்சியின் பொதுச்செயலாளர் என்றவகையிலும் அரசாங்கத்தின் ஊழல், மோசடிகள் தொடர்பாக பேசக்கூடாது எனவும் வேறு பயணமொன்றை மேற்கொள்ள தயாராகின்றீர்களா என தம்மிடம் கேட்டதாகவும் இதன்போது நினைவுகூர்ந்த ஜனாதிபதி, ஊழல், மோசடிகளுக்கு எதிராகச் செயற்படுவது மாத்திரமன்றி அது தொடர்பாக பேசக்கூட முடியாது எனில் மக்களின் நன்மைக்காக தனியானதொரு பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என தான் அன்று உறுதியாக தீர்மானித்ததாக ஜனாதிபதி தெரிவித்தார்.
ஊழல், மோசடிகளுக்கு எதிராகச் செயற்படுகையில் கட்சி, நிறம், பதவி, உறவுகள் மற்றும் நட்பு என்ற எந்தவொரு விடயத்தையும் கருத்திற்கொள்ளாததுடன், இன்று நாட்டில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது தமது சகோதரர்களுக்கும் அவ்விதமே நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பதை தான் செயலில் தற்போது காட்டியுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் திம்புலாகல பிரதேச சபைக்கு போட்டியிடும் அபேட்சகர்களின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக இந்த மக்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பிரதேசத்தின் மகாசங்கத்தினர் உள்ளிட்ட சர்வ மத தலைவர்கள், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரட்ன, என்.பி.சமந்த உள்ளிட்ட பிரதேச மக்கள் பிரதிநிதிகள் பலரும் இந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இதனிடையே பொலன்னறுவை கலஹகல ஸ்ரீதர்மராஜ விகாரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு தொகுதி இன்று முற்பகல் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது.
“கருணை ஆட்சி – நிலையான நாடு” கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ள அனைவருக்கும் ஆரோக்கியமான அளித்து, நோயற்ற சமூகத்தைக் கட்டியெழுப்பும் நோக்குடன் சிறுநீரக நோய் நிவாரண தேசிய செயற்திட்டம் மற்றும் ஜப்பான் கூட்டமைப்பின் பிரதான நிறைவேற்றதிகாரி கலாநிதி மிட்சுகி சுகியின் அன்பளிப்பில் இந்த நீர் சுத்திகரிப்புத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
”எழுச்சி பெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் கலஹகல ஸ்ரீ தர்மராஜ விகாரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய அறநெறி பாடசாலைக் கட்டிடமும் இதன்போது ஜனாதிபதியால் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
விகாராதிபதி பொலன்னறுவை பிரதேச பிரதான சங்க நாயக்கர் குருவாஓயே தம்மசித்தி நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரால் பிரித் பாராயணம் செய்யப்பட்டு ஜனாதிபதிக்கு இதன்போது ஆசிர்வாதம் வழங்கப்பட்டது.
வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரட்னவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
அதன்பின்னர் பொலன்னறுவை திம்புலாகல பிரதேச சபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் அபேட்சகர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்புக்கள் பலவற்றிலும் இன்று ஜனாதிபதி பங்குபற்றினார்.
முதலாவதாக திம்புலாகல, கல்தலாவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி கலந்துகொண்டார்.
அதன்பின்னர் யாய 08 அரச மரத்தருகே இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி கலந்துகொண்டார்.
ஜனாதிபதி, 1989 ஆம் ஆண்டில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், பொலன்னறுவை மக்களுக்காக மேற்கொண்ட முதலாவது அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட யாய 08 பாலத்தின் அருகே இடம்பெற்ற இந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதிக்கு பிரதேச மக்களால் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன்பின்னர் யாய 05 ஸ்ரீ விசுத்தாராம விகாரைக்கு அருகே இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.
அரலகங்வில மற்றும் விஜயபாபுர வட்டாரங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் அபேட்சகர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த மக்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்பின்னர் அரலகங்வில, அரசமர சந்தியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.
இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தம்மால் ஆரம்பிக்கப்பட்ட பொலன்னறுவை மாவட்டத்தின் அபிவிருத்தி செயற்திட்டங்கள் தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் மிகுந்த வினைத்திறனுடனும் துரிதமாகவும் இடம்பெற்று வருவதாக வலியுறுத்தினார்.
ஊழல், மோசடி மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக செயற்பட்ட உலக தலைவர்களுடன் அந்நாட்டு மக்களும் இணைந்து கொண்டுள்ளதைப் போல தாமும் மக்களுடன் இணைந்து ஊழல், மோசடி மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்லவுள்ளதாக ஜனாதிபதி வலியுறுத்தினார்.
வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரட்ன உள்ளிட்ட பிரதேச மக்கள் பிரதிநிதிகள் பலரும் இந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டனர்.