இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் பில்லியன் கணக்கான டாலர்கள் ஊழல் நடந்திருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை விசாரிப்பதற்கு சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்குவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த வழக்குகளை பிரத்தியேகமாக விசாரிப்பதற்காக உயர் நீதிமன்றங்கள் மூன்று நீதிபதிகளை கொண்டிருக்கும் என்று அரசாங்கம் கூறியுள்ளது.
அரசு கருவூலத்தில் இருந்து பெரும் தொகையை எடுத்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களை விசாரிப்பதற்கான நடவடிக்கை மெதுவாக நடைபெறுவதாக விமர்சனங்கள் வந்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனினும் இந்த குற்றச்சாட்டுக்களை கடந்த அரசாங்க ஆட்சியாளர்கள் மறுத்துள்ளனர்.
இந்த ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து இந்த புதிய நீதிமன்றங்கள் செயல்படத் தொடங்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.