அமைச்சர்களின் பினாமிகளுக்கு புதிய பஸ் ரூட்டுகள்: தினகரன் குற்றச்சாட்டு

224 0

பஸ் கட்டணத்தை உயர்த்தி அமைச்சர்களின் பினாமிகளுக்கு புதிய பஸ் ரூட்டுகள் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக டிடிவி தினகரன குற்றம் சாட்டியுள்ளார்.

பஸ் கட்டண உயர்வை கண்டித்து திருவள்ளூரை அடுத்த ஈக்காட்டில் நடந்த கண்டன கூட்டத்தில் தினகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதா வது:-

ஒரே இரவில் பஸ் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி மக்களின் வாழ்வாதார பிரச்சினையில் கை வைத்திருக்கிறார்கள்.

மக்களை வாட்டி வதைக்கின்ற வகையில் பஸ் கட்டணத்தை இந்த அரசு உயர்த்திருக்கிறது. கட்டண உயர்வுக்கு காரணம் போக்குவத்து துறையில் ஏற்பட்ட நஷ்டம் தான் என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்.

அரசு பஸ்கள் மக்களின் நலனுக்காக சேவை மனப்பான்மையோடு இயக்கப்படுபவை. இதில் லாப நஷ்டம் பார்ப்பது ஒரு நல்ல அரசுக்கு அழகல்ல. போக்குவத்து துறையில் நஷ்டம் ஏற்படுகிறது என்றால், அதை சரிகட்ட வேறு துறைகளிலிருந்து பணத்தை ஈடு செய்ய வேண்டும். அதைவிடுத்து, மக்கள் மீது கை வைத்து அவர்கள் வாழ்வோடு விளையாடுவது விபரீத போக்காகும்.

நஷ்டத்தை சரிகட்டுவதற்காக ஒரே இரவில் கொரில்லா தாக்குதல்போல் கட்டணத்தை உயர்த்தி இருப்பது என்ன நியாயம்? இந்த கட்டண உயர்வை தாங்கிக்கொள்ள முடியாமல் தான் மக்கள் மாற்று வழியாக ரெயில் பயணங்களை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். ஒரு வாரத்தில் மட்டும் பல லட்சம் பேர் ரெயில் பயணங்களை தேர்ந்தெடுக்கிறார்கள்.

இந்த கட்டண உயர்வால் 5.5 லட்சம் பேர் மாத பயண அட்டையை வாங்கியிருக்கிறார்கள். தினமும் 2.25 லட்சம் பேர் கூடுதலாக ரெயில்களில் பயணம் செய்திருக்கிறார்கள்.

ஒரு வாரத்திலேயே ரெயில்வே துறைக்கு தமிழகத்தில் மட்டும் ரூ.2கோடி வசூலாகியிருக்கிறது. இந்த புள்ளி விவரம் எதை காட்டுகிறது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

தமிழக மக்களுக்கு பாதகமாக இருக்கும் எந்த திட்டத்தையும் அம்மா துணிச்சலோடு, மத்திய அரசை எதிர்த்து போராடினார். ஆனால் இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் மத்திய அரசிடம் வாய் பொத்தி, கைகட்டி நிற்கிறார்கள்.

மத்திய அரசின் உணவு பாதுகாப்பு திட்டத்தால் தமிழகத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. வாருங்காலத்தில் ரே‌ஷன் கடகளே இல்லாமல் போய் விடும் என்ற அச்சம் நிலவுகிறது.

ஜி.எஸ்.டி. வரியால் மக்கள் பெரிதும் பாதித்து இருக்கிறார்கள். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் எந்த பயனும் கிடைக்கவில்லை. பணப்புழக்கம் இல்லாமல் மக்கள் அல்லல்படுகிறார்கள்.

தனியார் பஸ் உரிமையாளர்கள் பஸ் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளவும், தனியாருக்கு புதிய பஸ் ரூட்டுகளை வழங்கவும் முன் வந்திருக்கிறார்கள். குறிப்பாக கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர்களின் பினாமிகளுக்கு புதிய பஸ் ரூட்டுகள் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

பஸ் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி விட்டு ஒரு ரூபாய் குறைத்திருக்கிறோம் என்று சொல்லுவது, அப்பட்டமான கண் துடைப்பு நாடகம். மலைபோல உயர்த்தி விட்டு கடுகளவு குறைத்திருக்கிறது இந்த அரசு.

கட்சிக்கும் ஆட்சிக்கும் துரோகம் செய்து விட்டு, அம்மாவின் ஆட்சியை கவிழ்க்க நினைத்த பன்னீர்செல்வத்துடன் கை கோர்த்துக் கொண்டு அவருக்கு துணை முதல்வர் பதவியும் கொடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், சசிகலாவால் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கொடுத்த, தோள் கொடுத்த நம்முடைய 18 எம்.எல்.ஏ.க் களை பதவி நீக்கம் செய்து துரோகம் இழைத்திருக்கிறார் இதில் விரைவில் நல்ல தீர்ப்பு வரும்.

கட்சிக்கும், ஆட்சிக்கும் தியாகம் செய்தவர்களுக்கு நீதிமன்றத்தின் மூலம் நல்ல தீர்ப்பு கிடைக்கும். துரோகம் இழைத்த எடப்பாடி பழனிசாமி ஆட்சி விரைவில் வீட்டுக்கு அனுப்பப்படும். மீண்டும் அம்மாவின் ஆட்சி தமிழகத்தில் மலரும்.

எம்.ஜி.ஆரும், அம்மாவும் நாட்டுக்காக ஆட்சி நடத்தினார்கள். இப்போது இருப்பவர்களோ குடும்ப ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஊழல் செய்து விட்டு சிறைக்கு போகாமல் தப்பிக் கொள்ள வடக்கு நோக்கி தவமிருக்கிறார்கள்.

மீத்தேன் திட்டம், எரி வாயு திட்டம் போன்றவற்றை அம்மா கடுமையாக எதிர்த்தார். இவர்கள் இருகரம் கூப்பி வரவேற்கிறார்கள். நீட் தேர்வை எதிர்த்து துண்டு பிரசுரம் விநியோகித்த தொண்டர்கள் மீது தேச துரோக வழக்கு போட்ட ஒரே கேவலமான அரசு. எடப்பாடி பழனிசாமி அரசுதான்.

நீட் தேர்வை அம்மா கடைசி வரை எதிர்த்தார். இவர்களோ, சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறார்கள். இப்படி அம்மாவின் எண்ணங்களுக்கும் கொள்கைகளுக்கும் விரோதமாக இந்த அராஜக ஆட்சிக்கு விரைவில் முடிவு கட்டப்பட வேண்டும்.இவ்வாறு தினகரன் கூறினார்.

Leave a comment