கர்நாடகாவை காவிரியில் தண்ணீர் திறக்க மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்: ஜி.கே.வாசன்

246 0

காவிரி நதியிலிருந்து குறைந்த பட்சம் 15 டி.எம்.சி. தண்ணீரையாவது திறக்க கர்நாடகாவை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என ஜி.கே.வாசன் அறிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக டெல்டா மாவட்ட பகுதி விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட சம்பா சாகுபடிக்கு போதிய தண்ணீர் கிடைக்காததால் காத்துக் கிடக்கிறார்கள். ஏற்கனவே 81 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு காவிரி நதியிலிருந்து தமிழகத்திற்கு திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை அதனை முறையாக, முழுமையாக இன்னும் திறந்துவிடவில்லை.

தமிழக விவசாயிகளின் உண்மை நிலையை கர்நாடக அரசும், மத்திய பா.ஜ.க. அரசும் புரிந்து கொண்டு அதன் அடிப்படையிலே உடனடியாக தமிழக சம்பா பயிரை காப்பாற்ற தண்ணீர் கொடுத்து சம்பா பயிர் கருகாமல் இருப்பதற்கான நிலையை ஏற்படுத்த வேண்டும்.

தற்போது டெல்டா மாவட்ட பகுதிகளில் சுமார் 10 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிரை காப்பாற்ற குறைந்த பட்சம் 15 டி.எம்.சி. தண்ணீரையாவது காவிரி நதியிலிருந்து கர்நாடக அரசு திறந்துவிட முன்வர வேண்டும். இதற்காக மத்திய பா.ஜ.க அரசு கர்நாடக அரசை வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment