கவர்னர் ஒப்புதல் அளிக்காததால் எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கவில்லை

241 0

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சம்பள உயர்வு தொடர்பான மசோதாவில் கவர்னர் ஒப்புதல் அளிக்காததால் ஜனவரி மாதம் பழைய சம்பளத்தையே எம்.எல்.ஏ.க்கள் பெற இருக்கிறார்கள்.

தமிழக எம்.எல்.ஏ.க் களுக்கு சம்பளம் மற்றும் படி ஆகியவை சேர்த்து மாதம் தோறும் ரூ.55 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் ரூ.1.05 லட்சமாக உயர்த்தப்படும். இது 2017 ஜூலை முதல் வழங்கப்படும் என்று முதல்- அமைச்சர்எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவித்தார்.

இதற்கான சட்ட முன்வடிவை சட்டசபையில் கடந்த மாதம் 10-ந்தேதி துணை முதல்-மந்திரி ஒ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாவுக்கு கவர்னர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் இந்த மாதம் சம்பள உயர்வு கிடைக்கவில்லை. ஜனவரி மாதத்துக்கு பழைய சம்பளமே வழங்கப்படுகிறது.

கவர்னர் ஒப்புதல் பெற்ற பிறகு நிலுவை தொகையுடன் எம்.எல்.ஏ.க்களுக்கு புதிய சம்பளம் வழங்கப்பட உள்ளது.

இந்த மாதத்தில் எம்.எல்.ஏ.க்களுக்கான சம்பளம் உயர்த்தப்படவில்லை என்பதை முன்னாள் மேயரும், தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான மா.சுப்பிரமணியன் உறுதி செய்தார்.

பஸ் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டு இருக்கும்போது எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பள உயர்வு வேண்டாம் என்று எங்கள் தலைவர் (தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்) சட்டசபையில் எதிர்க்கட்சிகளின் கருத்தை பதிவு செய்தார் என்றும் அவர் தெரிவித்தார்.

சுயேட்சை எம்.எல்.ஏ.வான தினகரனும் சம்பள உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். புதிய சம்பளம் வேண்டாம், பழைய சம்பளம் போதுமானது என்று அவர் சபாநாயகருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

Leave a comment