உள்ளாட்சி தேர்தலுக்கு தயராகவும், கட்சியை வலுப்படுத்தவும் கோவை மற்றும் நீலகிரி மாவட்ட நிர்வாகிகளுடன் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார்.
தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், கட்சியில் ஊராட்சி செயலாளர்கள் முதல் மாவட்ட கழக செயலாளர்கள் வரை அனைவரையும் மாவட்ட வாரியாக அழைத்து ஆய்வு செய்ய போவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன்படி இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் ஆய்வு கூட்டம் தொடங்கியது.
முதல் நாளான இன்று கோவை மாநகர் வடக்கு, தெற்கு மாவட்ட நிர்வாகிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.
மாநகர் மாவட்ட செயலாளர்களான கார்த்திக் எம்.எல்.ஏ., முத்துசாமி ஆகியோர் உள்பட கட்சியில் உள்ள பகுதி செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், இளைஞரணி, மாணவரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஊராட்சி கழக செயலாளர்கள் என அனைத்து மட்ட நிர்வாகிகளும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றனர்.
இவர்களிடம் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார். அவருடன் முதன்மைச் செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோரும் உடனிருந்தனர்.
இதில் நடிகர்கள் ரஜினி, கமல் அரசியலுக்கு வருவதால் அதை எதிர் கொள்ளும் வகையில் கட்சி பணியை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டதாக தெரிகிறது.
நிர்வாகிகளுக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளை மறந்து கட்சி வளர்ச்சிக்கு தீவிரமாக உழைக்க வேண்டும் என்றும் உள்ளாட்சி தேர்தல் மட்டுமல்ல, பொதுத் தேர்தல் வந்தாலும் அதில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளின் குறைகளையும் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை என்பதால் செல்போனை வெளியில் கொடுத்து விட்டு கூட்டத்தில் பங்கேற்றனர்.
இன்று மாலை நீலகிரி மாவட்ட நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்துகிறார். அடுத்த மாதம் 22-ந்தேதி வரை ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது.