ஜப்பானில் முதியோர் இல்லத்தில் திடீர் தீ விபத்து: 11 பேர் உயிரிழப்பு

372 0

ஜப்பானில் முதியோர் பாதுகாப்பு இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஜப்பானின் சப்போரோ பகுதியில் பொருளாதார ரீதியாக பின்தங்கி கஷ்டப்படும் முதியோருக்கு உதவும் வகையில் உள்ளூர் அமைப்பு சார்பில் குறைந்த கட்டணத்தில் தங்குமிடம் செயல்படுகிறது. மூன்று தளங்கள் கொண்ட இந்த கட்டிடத்தில்  16 முதியோர்கள் தங்கியிருந்தனர். அவர்களுக்கு தேவையான வேலை வாய்ப்புகளையும் இந்த அமைப்பு ஏற்பாடு செய்து வருகிறது.

இந்நிலையில், இந்த இல்லத்தில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனே அங்கிருந்த முதியோர் அனைவரும் அவசரம் அவசரமாக வெளியேறினர். இருப்பினும் தீ மளமளவெனப் பரவியதால் சிலர் உள்ளே சிக்கிக்கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. 8 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 11 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 5 பேர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a comment