அரசியல் கள்வர்களை கருவறுக்கும் நடவடிக்கை ஆரம்பம்!

253 0

அரசியல் கள்வர்களை கருவறுக்கும் வேலைத்திட்டத்தை நான் ஏற்கெனவே ஆரம்பித்து விட்டேன். கள்வர்களற்ற மூவினத்தவரையும் ஒரே குடும்பமாகக் காண்பதே எனது கனவு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மட்டக்களப்பு – காத்தான்குடி பிரதேசங்களில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவு திரட்டும் பரப்புரைகளில் நேற்று புதன்கிழைமை இரவு கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

நான் ஜனாதிபதியாவதற்காக மட்டக்களப்பு மாவட்ட மக்களாகிய நீங்கள் பெருமளவு வாக்குகளை அள்ளித் தந்தீர்கள்.

அதற்காக எனது கௌரவ நன்றியறிதல்களை உரித்தாக்குகின்றேன். நான் செய்நன்றி மறப்பவன் அல்லன். உங்களுக்காக கடந்த 3 வருடங்களாக நான் பல வேலைத் திட்டங்களைச் செய்திருக்கின்றேன். ஆனால் அது உங்கள் பிரதேசங்களுக்கு அல்ல அது முழு நாட்டுக்குமானது.

யுத்தம் முடிந்தாலும் பிரச்சினைகள் தீர்ந்திருக்காத ஒரு கால கட்டத்தில் நீங்கள் என்னை ஜனாதிபதியாக்கினீர்கள். ராஜபக்ஷ அரசாட்சிக் காலத்திலே உங்களுக்குப் பலவிதமான கஷ்டங்களும் ந‪ஷ்டங்களும் துன்புறுத்தல்களும் இருந்தன.

முஸ்லிம் மக்களுக்கு பல இன்னல்கள் இருந்தன. நீங்கள் சந்தோசமாக வாழ முடியவில்லை. சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் ஒற்றுமை ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை. அதனால் மஹிந்த அரசாங்கத்தை நீங்களும் உங்களுடைய தலைவர்களும் நிராகரித்தீர்கள்.

அந்தக் காலத்திலே பலபேர் காணாமலாக்கப்பட்டார்கள். அப்பாவிகள் தெருக்களிலே கொலை செய்யப்பட்டிருந்தார்கள். பத்திரிகைகளில் உண்மையை எழுதியவர்கள் சுடப்பட்டுக் கொல்லப்பட்டிருந்தார்கள். முழு உலகிலும் பிரபலமான தாஜுதின் போன்ற சிறந்த வீரர்கள் தெருவிலே கொல்லப்பட்டார்கள்.

அது எவ்வாறு நடந்தது என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். இந்த நாட்டிலே அன்று ஜனநாயகம் இருக்கவில்லை. சுதந்திரம் இருக்கவில்லை. அமைச்சர்கள் தங்களது சக அமைச்சர்களுடன் தொலைபேசியில் கூட பேசமுடியவில்லை. அரச உத்தியோகத்தர்களும் இவ்வாறு தான் சக உத்தியோகத்தர்களுடன் பேச முடிந்திருக்கவில்லை.

எல்லாத் தொலைபேசி உரையாடல்களும் ஒட்டுக் கேட்கப்பட்டன. உலக நாடுகள் பல எங்கள் நாட்டின் மீது கண்டனக் கணைகளைத் தொடுத்தன.

ஐ.நா. சபை எங்களோடு கோபித்துக் கொண்டது. உலகிலுள்ள 200 இற்கு மேற்பட்ட நாடுகளில் நான் ஜனாதிபதியாகும்போது 5 நாடுகள் கூட எமக்கு ஆதரவாக இருந்திருக்கவில்லை. அதனால் நான் வெற்றி பெற்றதன் பின்னர் உங்களைக் காண்பதற்காக இங்கெல்லாம் வரவில்லை. நான் உலகத் தலைவர்களைப் போய்ப் பார்க்கவேண்டியிருந்தது.

ஐ.நா. செயலாளரைச் சந்தித்தேன். எனது நாட்டை சரியாககக் கட்டியெழுப்ப நீங்கள் உதவுங்கள் என்றேன். எங்களைத் தொல்லைப் படுத்தாதீர்கள் என்று மன்றாடினேன். மனிதக் கொலைகளை நிறுத்துவேன், நாட்டில் ஆட்கள் காணாமல் போகும் நிலைமையை இல்லாமல் செய்வேன் என்று நான் வாக்குறுதியளித்தேன்.

கடந்த மூன்று வருட காலத்திலும் இந்த நாட்டிலே எவரும் தெருக்களில் கொல்லப்படவுமில்லை, காணாமலாக்கப்படவுமில்லை. செய்தியாளர்கள் நாட்டை விட்டுச் செல்லவில்லை. எல்லாவற்றையும் நிறுத்தினேன்.

எனக்கு வாழ்க்கையிலே ஒரு கனவு இருக்கிறது. இந்த நாட்டின் சிங்கள, தமிழ் முஸ்லிம் மக்கள் புன்னகைத்துக் கொண்டு ஒரு குடும்பமாக வாழ வேண்டும் என்பதுதான் எனது கனவு. அதனை நான் கண்ணாரக் காண வேண்டும். இலங்கையரான நாங்கள் ஒரு குடும்பம் போன்று வாழுகின்றோம் என்பதை முழு உலகுக்கும் பறைசாற்ற வேண்டும். சந்தேகம் பயமில்லாமல் பரஸ்பர நம்பிக்கையோடு நாங்கள் வாழ வேண்டும்.

அதற்காக நாமெல்லோரும் ஒன்றுபட வேண்டும். நான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தும் கிராம மட்டத்திலே பணியாற்றுவதற்கு எனக்கு வழியிருக்கவில்லை. கிராம மக்களையும் நகர மக்களையும் இணைப்பதற்கு ஒரு பாலம் இருக்கவில்லை. அந்த இணைப்புப் பாலத்தை இனி அமைக்க வேண்டும்.

இந்த நாட்டிலே படித்தவர்களுக்கு முக்கியமான பொறுப்புக்களை வழங்க வேண்டும். பெண்கள் முன்னேற நாம் உதவ வேண்டும். பெண்களின் பிரச்சினைகளை சரியாக நாம் தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும். அவர்களை வலுவூட்ட வேண்டும். புதிய சமுதாயத்திற்கு வழிவிட வேண்டும். தவறான பிரதிநிதிகள் கோலோச்ச  நான் ஒரு போதும் இடமளிக்க மாட்டேன்.

அதிகாரக் கள்ளவர்களால்தான் இந்த நாடு பாழாய்ப் போனது. எல்லோரும் அல்ல ஆனால் கூடுதலானோர் களவெடுக்கிறார்கள். கள்வர்களை நான் வெளியே தள்ளுவேன். ராஜபக்ஷ காலத்தில் நாடு எப்படி சூறையாடப்பட்டது என்பதைத் தாங்கள் அறிவீர்கள். அதேபோன்று இந்த அரசாங்கக் காலத்திலும் சில கூட்டம் ஒன்று சேர்ந்து களவாடினார்கள் என்ற கதையும் உங்களுக்குத் தெரியுமல்லவா. எந்தக் கட்சியாக இருந்தாலும் அரசாங்கத்திலுள்ளவர்களாக இருந்தாலும் கொள்ளையடிப்பதற்கு நான் இடமளிக்க மாட்டேன்.

நான் அரசியலுக்காக நல்லதொரு குழுவை உருவாக்கிக் கொண்டிருக்கின்றேன். இங்குள்ளதை விட கள்வர்களுக்கு இஸ்லாமிய நாடுகளில் என்ன தண்டனை வழங்குகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அதனால்தான் அவர்கள் தண்டனைக்குப் பயந்து களவை விட்டு விட்டு  முன்னேறியிருக்கிறார்கள்.

எமது நாட்டிலே அரசியல்வாதிகள் எவ்வளவுதான் களவெடுத்தாலும் தவறு செய்தாலும் தண்டனை வழங்கப்படுவதில்லை. ஆனால், தண்டனை வழங்குவதை நான் ஆரம்பித்து விட்டேன். நான் கட்சிபேதமின்றி கள்வர்களை தயவு தாட்சண்யமின்றித் தண்டிப்பேன். எனக்கு இந்த நாடு நாட்டு மக்களின் முன்னுரிமையைத் தவிர தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலொன்று இல்லவே இல்லை. அதற்காக நீங்கள் எனக்கு உதவ வேண்டும்.

யுத்தத்துக்கு பின்னரான பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றாத காரணத்தினால் யுத்தம் நிறைவு பெற்றபோதும் நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஐக்கியமாக வாழக்கூடிய சூழல் நாட்டில் உருவாகவில்லை.

மீண்டுமொரு யுத்தம் இந்த நாட்டில் ஏற்படாத வகையில் நாட்டை கட்டியெழுப்புவது எனது நோக்கம். இதற்காக இன்று சர்வதேசத்தின் உதவி நாட்டுக்கு கிடைத்துள்ளது எனத் தெரிவித்தார்.

Leave a comment