கொள்ளையடிப்பதற்காகவா அரசியல்வாதிகளை தெரிவு செய்கிறீர்கள்?

237 0

வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்காக 2 கோடி ரூபா பணத்தை தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாங்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூறியிருந்த கருத்தை ஊடகங்கள் வாயிலாக பார்த்தேன். மக்கள் கொள்ளையடிப்பதற்காக இவர்களை தேர்வு செய்தார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசநாயக்கா கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் பிச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் தெரிவிக்கையில்,

கொள்ளையர்களை பிடிக்கப்போகிறோம். சட்டத்தின் முன்னால் நிறுத்துவோம் என கூறிக்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா ஆகியோர் ஆட்சிக்கு வந்தார்கள். 2015 ஆம் ஆண்டு தை மாதம் ஆட்சியை கைப்பற்றி ஒரு மாதம் கூட முழுமையாக நிறைவடையாத நிலையில் பெப்ரவரி மாதம் மத்திய வங்கி பிணைமுறி கொள்ளையை செய்தார்கள்.

கொள்ளையர்களை பிடிப்போம். என கூறிக்கொண்டு வந்தவர்கள் கொள்ளையடித்தார்கள். கொள்ளையர்களை இன்றளவும் பிடிக்கவில்லை. இந்நிலையில் அரசியலே வேண்டாம் என கூறும் நிலைக்கு மக்கள் வந்திருக்கிறார்கள். அதற்கு காரணம் அரசியல்வாதிகள் கொள்ளைகாரர்களாக மாறியதே. தேர்தலின்போது சைக்கிளில் வருபவர்கள் பின்னர் விலை உயர்ந்த வாகனங்களில் வருகிறார்கள். எங்கிருந்து வந்தது பணம்? எல்லாம் மக்களிடம் கொள்ளையடித்த பணம். 1600 கோடி ரூபா பணத்தை மத்தியவங்கி பிணைமுறி கொள்ளையில் கொள்ளையடித்துள்ளார்கள்.

அதில் 800 கோடி ஈ.பி.எவ் பணம். சாதாரண தனியார் துறை ஊழியர்களுடைய பணத்தை கொள்ளையடித்துள்ளார்கள். இப்போது பிரதமர் ரணில் கூறுகிறார் மத்திய வங்கியிலேயே அந்த பணம் உள்ளதாக. கொள்ளையடிக்கப்பட்ட பணம் இருக்கிறது என்பதற்காக கொள்ளையர்களை விடுதலை செய்ய இயலுமா? பிணைமுறி கொள்ளை தொடர்பான அறிக்கையில் ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலருடைய பெயர்கள் வரவுள்ளதாக அறிகிறோம். தெற்கைபோல் வடக்கிலும் தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்கியதற்காக 2 கோடி ரூபா வழங்கப்பட்டதாக பாராளுமன்ற உ றுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூறியிருந்த கருத்தை ஊடகங்கள் வாயிலாக பார்த்திருந்தேன்.

கொள்ளையடிப்பதற்காகவா இவர்களை பாராளுமன்றம் அனுப்பினீர்கள்? மக்களுக்கு வீடு இல்லை. வாழ்வாதாரம் இல்லை. போஷாக்கு இல்லை. கல்வி இல்லை. முறையான மருத்துவம் இல்லை. இந்த நிலையில் இந்த கொள்ளையர்களால் என்ன பயன்? 70 வருடங்கள் இந்த ஆட்சியாளர்கள் எங்களை ஆட்சி செய்திருக்கிறார்கள். 70 வருடங்களில் இவர்களால் மக்கள் பெற்ற பயன் என்ன?

இந்த உண்மைகளை மறைப்பதற்காக இனவாதத்தை தூண்டினார்கள். சாமானிய தமிழ், சிங்கள மக்களின் பிள்ளைகளை சண்டையிட செய்தார்கள். பலர் கொல்லப்பட்டார்கள். ஆனால் ஆட்சியாளர்கள் சண்டை போட்டார்களா? ஒற்றுமையாக இருக்கிறார்கள். தமிழர்களுக்கு சிங்களவர்களை எதிரி எனவும், சிங்களவர்களுக்கு தமிழர்களை எதிரி எனவும் வடக்கிலும், தெற்கிலும் இனவாதத்தை தூண்டி அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கொள்ளையடிப்பதை மறைக்க இனவாதத்தை தூண்டினார்கள். இந்த நிலையை மாற்றியமைக்கவேண்டும். அதற்கான சந்தர்ப்பமாக இந்த உள்ளூராட்சி சபை தேர்தலை மக்கள் பயன்படுத்தவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment