பளைப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் சட்டவிரோத மண் அகழ்வுக்குப் பொலிஸ் அதிகாரிகள் துணைபோகின்றனர் என பிரதேச மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுதொடர்பாக மேலும் தெரிவித்ததாவது:
பளை பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கிளாலி, அல்லிப்பளை, புலோப்பளை, முகமாலை மற்றும் சோரன்பற்று போன்ற பகுதிகளில் தொடர்ச்சியாக சட்ட விரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்றது.
இதுதொடர்பில் பொலிஸார் உட்பட்ட பல்வேறு தரப்பினரிடமும் முறைப்பாடு செய்துள்ளோம். எனினும், எவரும் இதனைத் தடுத்ததாகத் தெரியவில்லை. மாறாக அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றனர். குறிப்பாக பொலிஸார் மிக இரகசியமான முறையில் அவர்களுக்கு உதவிசெய்து வருகின்றனர்.
சட்டவிரோதமாக மணல் அகழப்படும் சந்தர்ப்பங்களில் பிரதேசவாசிகள் சிலர் தொலைபேசியூடாக பொலிஸாருக்குத் தகவல் வழங்குகின்றனர். அவ்வாறு தகவல் வழங்கும் நபர்களின் தொலைபேசி உட்பட்ட சகல விவரங்களும் பொலிஸார் ஊடாக மணல் கொள்ளையர்களுக்கு வழங்கப்பட்டு விடுகின்றன.