மன்னார் பலநோக்கு கூட்டுறவுச்சங்கக் கட்டடத்தை கடந்த 15 வருடங்களுக்கு மேலாக ஆக்கிரமித்திருந்த இராணுவத்தினர் நேற்றுக்காலை அங்கிருந்து வெளியேறினர்.
குறித்த கட்டடத்தில் உள்ள இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என தொடர்ச்சியாக அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றையதினம் அங்கிருந்து முழுமையாக வெளியேறியது.
நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் ஆகியோர் பலநோக்கு கூட்டுறவுச்சங்க கட்டடத்தில் உள்ள இராணுவத்தை அகற்றுவது தொடர்பில் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் குறித்த கட்டடத்தில் இருந்து இராணுவத்தினர் அகற்றப்படுவார்கள் என கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தநிலையில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக மேற்படி கட்டத்தை ஆக்கிரமித்திருந்த இராணுவத்தினர் நேற்று செவ்வாய்க்கிழமை காலை மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பரமதாசனிடம் பலநோக்கு கூட்டுறவுச்சங்கக் கட்டடத்தைக் கையளித்து வெளியேறினர்.