தமிழ் சிங்கள மக்களுக்கிடையே முரண்பாடுகள் இல்லை. ஏன் இரு இனத்தவர்களும் பிரிய வேண்டும். இரு இனங்களையும் பிரிப்பதற்கு மேலே உள்ள அரசியல்வதிகள் சூழ்ச்சியை கையாள்கின்றார்கள். இவ்வாறான அரசியல்வாதிகளுக்கு பாடம்புகட்ட அனைவரும் மக்கள் விடுதலை முன்னணியுடன் அணிதிரள வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் அரியாலை பகுதி வேட்பாளருக்கான ஆதரவு கூட்டம் அரியாலை காந்தி சனசமூக நிலையத்தில் நேற்று (30) இரவு இடம்பெற்றது. அக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் அரசியல்வாதிகள் கொள்ளையர்களாக மாறியுள்ளார்கள். கொள்ளையர்களிடமிருந்து நாட்டினைக் காப்பாற்ற வேண்டும். மக்களுக்கு ஏன் அரசியல் கசந்துபோய் உள்ளது. அரசியல் என்பது மக்கள் சேவையாகும். அரசியல் மகத்துவமானது.
ஆனால், இன்று ஏமாற்று வித்தையாக மாற்றியுள்ளார்கள். 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, உங்களுக்கு எவ்வளவோ கூறினார்கள். அதைச் செய்துள்ளார்களா? மக்களை ஏமாற்றியுள்ளார்கள். அரசியல்வாதிகள் திருடர்களாக மாறியுள்ளார்கள். கொள்ளைக்காரர்களிடமே அரசாங்கம் இருக்கின்றது. கடந்த 10 வருடங்களில் 15 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.
அரசாங்கத்திடம் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு 2 கோடி ரூபா பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது என்ன அரசியல். எல்லாம் பணத்திற்காக விற்கப்படுகின்றது. பணம் திரட்டுவதற்கான அரசியலாக மாறியுள்ளது. நாங்கள் அனைவரும் ஒரு பிரச்சினையில் சிக்கியிருக்கின்றோம்.
இவற்றை மாற்றி அமைக்க அணி திரள வேண்டும். இவை அனைத்தையும் பயன்படுத்தி இனவாதத்தைப் பரப்பினார்கள். தமது ஆட்சியை நிலைநாட்டுவதற்கு வடக்கு மாத்திரமின்றி தெற்கிலும் இனவாத்தைப் பரப்பியிருக்கின்றார்கள்.
தெற்கில் சிங்கள இனவாத்தினையும், வடக்கில் தமிழ் இனவாதத்தினையும் வளர்த்து வைத்துள்ளார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவு செலவு திட்டத்திற்கும் வாக்களித்தார்கள். நம்பிக்கை இல்லா பிரேரணையின் போதும் வாக்களித்தார்கள். அதனால் தான் அவர்கள் மேலே இருக்கின்றார்கள். அவர்கள் ஒரு நாளும் அடிபடுவதில்லை.
இனவாத்தை தோற்கடித்து தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவோம். இனவாதம் மற்றும் மதவாத்திற்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் குரல்கொடுக்கின்ற ஒரே ஒரு கட்சி மக்கள் விடுதலை முன்னணி.
மக்கள் விடுதலை முன்னணி நேரடியான அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வரையில், இந்த நாட்டில் மீண்டும் இனவாத்தை ஏற்படுத்த இடமளிக்கமாட்டோம் என்று அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.