நல்லாசிரியர் விருது வழங்கும் விழா 5-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு சென்னை சாந்தோமில் உள்ள செயிண்ட் பீட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் உள்ள நூற்றாண்டு கலையரங்கத்தில் நடைபெறுகிறது.
டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் 5-ந்தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆசிரியர்களை போற்றும் வகையில் பள்ளிக்கல்விதுறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.
சிறப்பாக கல்வி சேவை செய்து வரும் ஆசிரியர்களை தேர்வு செய்து இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. இதுவரையில் வெள்ளி பதக்கத்துடன் ரூ.5 ஆயிரம் ரொக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
சமீபத்தில் சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நல்லாசிரியர்களுக்கு வழங்கப்படும் ரொக்கப்பணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து இந்த ஆண்டு நல்லாசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கம் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
நல்லாசிரியர் விருதுக்கு 67 கல்வி மாவட்டங்களில் இருந்து தொடக்கப்பள்ளி, நடுநிலை, உயர்நிலை, மேல் நிலைப்பள்ளி ஆசிரியர்கள், மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். தேசிய ஆராய்ச்சி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த ஆசிரியர்களும் தேர்வு செய்யப்படுகின்றனர்.
நல்லாசிரியர் விருது வழங்கும் விழா 5-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு சென்னை சாந்தோமில் உள்ள செயிண்ட் பீட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் உள்ள நூற்றாண்டு கலையரங்கத்தில் நடைபெறுகிறது.
விழாவிற்கு செயலாளர் த.சபீதா தலைமை தாங்குகிறார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மா.பா.பாண்டியன் நல்லாசிரியர்களுக்கு விருது வழங்கி பாராட்டுகிறார். சென்னை மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ், அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, தமிழ்நாடு பாடநூல் நிறுவன மேலாண்மை இயக்குனர் மைதிலி ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் வரவேற்கிறார். முடிவில் தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் நன்றி கூறுகிறார். விழாவில் இயக்குனர்கள் வி.சி.ராமேஸ்வரமுருகன், கருப்பசாமி, அறிவொளி, கார்மேகம், பழனிசாமி, இணை இயக்குனர்கள் நரேஷ், பாஸ்கரசேதுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்.