வேலூரில் பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறைக்கு தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பஸ் கட்டணம் உயர்த்தபட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள், அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வேலூர் ஓட்டேரியில் உள்ள அரசு முத்துரங்கம் கலைகல்லூரியில் இன்று மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரியை விட்டு வெளியேறி, பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, மாணவர்கள் மீது போலீசார் தடியது நடத்தினர்.
இந்த சம்பவத்திற்கு தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.
“பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து போராடிய மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தி இருப்பதை கடுமையாக கண்டிக்கிறேன். மேலும் மாணவர்கள் மீதான அடக்குமுறையை கைவிட்டு, கட்டண உயர்வை உடனே திரும்ப பெறுவதோடு மட்டுமல்லாமல் மாணவர்கள் மீதான வழக்குகளை ‘குதிரை பேர’ அரசு ரத்து செய்ய வேண்டும்.” என தனது ட்விட்டரில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.