தேசிய சீனியர் டேபிள் டென்னிஸ்: 8-வது முறையாக பட்டம் வென்றார் தமிழக வீரர் சரத் கமல்

2406 27

ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய சீனியர் டேபிள் டென்னிஸ் தொடரில் தமிழக வீரர் சரத் கமல் எட்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். 

தேசிய சீனியர் டேபிள் டென்னிஸ் போட்டிகள் ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்று வந்தது. நேற்று இறுதி சுற்று போட்டிகள் நடைபெற்றன.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் ஏற்கனவே ஏழு முறை சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற தமிழக வீரர் சரத் கமல், மற்றொரு தமிழக வீரரான அண்டனி அமல்ராஜை எதிர்கொண்டார். இப்போட்டியில் 6-11, 11-6, 15-13, 11-8, 11-7 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்ற சரத் கமல் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். இது தேசிய சாம்பியன்ஷிப்பில் அவர் வெல்லும் எட்டாவது பட்டமாகும். இதன்மூலம் முன்னாள் டேபிள் டென்னிஸ் சாம்பியன் கம்லேஷ் மேத்தாவின் சாதனையை சரத் கமல் சமன் செய்தார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் மேற்கு வங்காளத்தின் சுதிர்தா முகர்ஜி, டெல்லியின் மனிகா பத்ராவை எதிர்கொண்டார், இதில் 11-4, 11-13, 11-6, 5-11, 11-2, 9-11, 12-10 என்ற செட்களில் மனிகா பத்ராவை வீழ்த்திய சுதிர்தா முகர்ஜி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் சவுமியஜித் கோஷ் – ஜுபின் குமார் ஜோடி, மோகித் வர்மா – சவுரவ் சஹா ஜோடியை எதிர்கொண்டது. இப்போட்டியில், சவுமியஜித் கோஷ் – ஜுபின் குமார் ஜோடி, 11-2, 11-6, 11-6 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் மவுசுமி பால் – ரித்விகா சின்ஹா ராய் ஜோடி, மவுமா தாஸ் – அர்ச்சனா கமத் ஜோடியை எதிர்கொண்டது. இதில், மவுசுமி பால் – ரித்விகா சின்ஹா ராய் ஜோடி, 6-11, 11-8, 9-11, 11-8, 11-7 என்ற செட்களில் வெற்றி பெற்றது.

கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் ராஜ் மொண்டால் – அகுலா ஸ்ரீஜா ஜோடி, ஆகாஷ் நாத் – அன்கிதா தாஸ் ஜோடியை எதிர்கொண்டது. இதில், 11-8,11-9, 9-11, 6-11, 11-6 என்ற செட்களில் வெற்றி பெற்ற ராஜ் மொண்டால் – அகுலா ஸ்ரீஜா ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது.

Leave a comment