நொதேன் பவர் நிறுவனத்தின் மின்சார உற்பத்தி நிலையமொன்றை சுன்னாகத்தில் அமைக்க, மாவை சேனாதிராசா பின்னணியில் செயற்பட்ட விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார் சிவசக்தி ஆனந்தன் எம்.பி. இதுவரை அரசியல் உயர்மட்டத்தில் மட்டும் பேசப்பட்டு வந்த தகவலை முதன்முறையாக பகிரங்கப்படுத்தியுள்ளார் சிவசக்தி ஆனந்தன் எம்.பி.
வவுனியா மன்னகுளத்தில் தமிழர் விடுதலைக்கூட்டணி வேட்பாளரை ஆதரித்து நேற்று மாலை கூட்டம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் உரையாற்றும் போது,
யாழ்ப்பாணம் சுண்ணாகத்தில் நொதேன் பவர் மின்நிலையத்தின் செயற்பாட்டின் காரணமாக நிலத்தடி நீரில் ஒயில் கலந்துள்ளதை அனைவரும் அறிவார்கள். தற்போது அந்த நீரை குடிப்பதற்கோ விவசாயத்திற்கோ பயன்படுத்த முடியாது உள்ளது. இந்நிலைமைக்கு முழுக்காரணமும் ஒரு கட்சியின் தலைவராகவும் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஒருவரே ஆவார். அவரே இந்நிறுவனத்தை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வந்து இந்த காரியத்தை செய்தமையினால் யாழ்ப்பாணத்து மக்கள் இந்த நீரை பயன்படுத்த முடியாது இருக்கின்றது. ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினராகவும் கட்சியின் தலைவராகவும் இருந்து கொண்டு பெருந்தொகையான நிதியை பெற்றுக்கொண்டு அந்த மக்களிற்கு நஞ்சூட்டியதற்கு ஒப்பான செயலை செய்துள்ளார். இந்த தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர் மாவைசேனாதிராஜா பாராளுமன்றத்திலும் கதைக்கவில்லை. பாராளுமன்றத்திற்கும் வெளியேயும் கதைக்கவில்லை. இன்று எத்தனையோ போராட்டங்களை அந்த மக்கள் கதைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் இந்த தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினர் மாவைசேனாதிராஜா மௌனமாகவே இருக்கின்றார். இந்த நிலையில் தான் எம்மை கொள்ளைக்காரர், கொலைகாரர் என்றும் தாங்கள் எல்லாம் வெள்ளை வேட்டி கட்டிய தூய்மையான புனிதர்கள் என்று கூறுகிறார். ஆகவே இதை எல்லாம் மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.
தமிழ்தேசிய கூட்டமைப்pற்ககும் வீட்டு சின்னத்திற்கும் வாக்களிக்குமாறு தமிழ் மக்களின் நெஞ்சில் பச்சை குத்தியது போன்ற நிலைமையை உருவாக்கியதில் எங்களுக்கும் பங்குண்டு. தமிழ் மக்களிற்கு ஒரு தீர்வும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு நியாயமான விடிவும் கிடைக்க வேண்டும் என்பதற்காக கடந்த 16 வருடங்களாக பயணித்திருந்தோம். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் அருவருடிகளாக மாறிவிட்டார்கள். அரசியல் தீர்வு விடயமாக இருந்தாலும் சரி, அபிவிருத்தி விடயங்களாக இருந்தாலும் சரி அவர்கள் அரசாங்கத்தின் கைக்கூலிகளாகவே மாறிவிட்டார்கள்.
கடந்த வரவு செலவு திட்டத்திற்கு வாக்களிக்க முடியாது என என்னோடு சேர்ந்து ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களிற்கான குழுக்கூட்டத்தில் தெரிவித்திருந்தார்கள். இதிலும் கிளிநொச்சி பாரளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஒரு படி மேல் சென்று என்னை கட்சியை விட்டு நீக்கினாலும் பரவாயில்லை வாக்களிக்க முடியாது என்று தெரிவித்திருந்தார். ஆனாலும் சம்மந்தரும், சுமந்திரனும் வாக்களிக்க வேண்டும் என்றே தெரிவித்திருந்தார்கள். எனினும் எட்டு பேர் வாக்களிக்க முடியாது என கூறியதால் அவர்கள் இருவரும் பிரதமரிடம் சென்று தங்களில் எட்டு பேர் அரசாங்கத்திற்கு சார்பாக வாக்களிக்க மாட்டார்கள் என கூறியதற்கு இணுங்க பிரதமர் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிற்கும் இரண்டு கோடி ரூபாய் வீதம் ஒதுக்குகின்றேன் அதனை நீங்கள் மாவட்ட அபிவிருத்திக்கு பயன்படுத்துங்கள் என்றும், தேர்தல் ஒன்று வர இருப்பதனால் உங்களிற்கு அது உதவியாக இருக்கும் என தெரிவித்தார். ஆகவே இந்த நிதியானது வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவு அளிப்பதற்காகவே வழங்கப்பட்டுள்ளது. ஆகவே இதனூடாக அரசாங்கத்திற்கு முண்டுகொடுத்து தமக்கு தேவையான விடயங்களை செய்து வருகின்றனர்.
இந்த இரண்டு கோடி ரூபாய் விடயமாக டிசம்பர் மாதமளவில் பாராளுமன்றத்தில் நான் கதைத்த போது எனக்கு பின்னால் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள் எவரும் இதைபற்றி கதைக்கவில்லை. இந்நிலையில் சாரைபாம்பில் மண்ணென்னை பட்டால் துடிப்பது போல் சிறீதரன் எம்பி அவர்கள் முடியுமானால் நிரூபித்து காட்டுங்கள் என கூறியிருந்தார். எனினும் அன்றைய தினமே மாவை சேனாதிராஜா பணம் வாங்கியதை ஒத்துக்கொண்டு விட்டார். எனினும் மாவைசேனாதிராஜா அவரது மகன் போட்டியிடும் வலிகாமத்திலேயே செலவு செய்திருக்கின்றார்.
இதேவேளை குடும்ப ஆட்சியை பற்றி கதைப்பதற்கு அருகதையற்றவர்களாகவே அவர்கள் இருக்கிறார்கள். மாவைசேனாதிராஜா தனது மகனை ஒரு தொகுதியில் போட்டியிட வைத்துள்ளார். அதேபோல் வவுனியாவில் உள்ள மாகாணசபை உறுப்பினர் சத்தியலிங்கம் குடும்ப அரசியலை பற்றி இதற்கு முன்பு பல தடைவ கதைத்ததை நான் பல தடைவ கேட்டிருக்கிறேன். ஆனால் அவர் தனது அண்ணனை சாஸ்திரிகூழாங்குளம் வட்டாரத்தில் போட்டியிட வைத்துள்ளார். அவ்வாறானவர் அண்மையில் கூட்டம் ஒன்றில் தன்னை ஈபிஆர்எல்எவ் கட்சி தன்னை பிடித்து அடித்ததாக ஏதோ உளறியிருந்தார். இது தொடர்பாக நான் நான் உள்ளுரிலும் வெளியூரிலும் எங்களது கட்சியை சேர்ந்தவர்களிடம் இவ்வாறான சம்பவம் நடந்ததா என்று விசாரித்திருந்தேன். அவர்கள் மலைத்துவிட்டார்கள். சத்தியநாதன் புளொட் அமைப்பை சேர்ந்த முன்னாள் உறுப்பினராவார். அந்த புளொட் அமைப்பு வவுனியாவில் என்ன செய்தது என்று அனைத்து பொது மக்களுக்கும் தெரியும். ஆகவே கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல்லெறிந்தால் இவ்வாறான விடயங்களதான் வரும். ஆகவே சத்தியநாதன் சார்ந்த புளொட் அமைப்பானது வவுனியாவில் என்ன செய்தது என்பதனை என்னால் பட்டியல் போட்டு காட்ட முடியும். இதற்கும் அப்பால் சத்தியநாதன் சார்ந்த புளொட் அமைப்பானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்தின் முக்கிய பங்காற்றிய ஊடகவியலாளர் தராக்கி சிவராம் என்கின்ற மாமனிதரைக்கு உலை வைத்துவிட்டுத்தான் சத்தியநாதனும் அவர்சார்ந்த கட்சியான புளொட்டும் கூட்டமைப்பிற்குள் வந்திருக்கிறார்கள். ஆகவே இவ்வாறான விடயங்களை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.