மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் தமிழ்த் தேசியப் பேரவையினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று (30.01.2018) தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. குறித்த வழக்கு வலி வடக்குபிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் வலிவடக்கு பிரதேச உள்ளூராட்சித் தேர்தல் வேட்பாளருமான சுகிர்தன் ஊடாக தமிழரசுக் கட்சி தாக்கல் செய்திருந்தது.
ஏற்கனவே குறித்த விவகாரம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் காங்கேசன்துறைப் பொலிசாருக்கும் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய குருக்கள் நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டிருந்தார். அதன்போது ஆலயப் பிரதேசத்தில் பூசை வழிபாடே இடம் பெற்றிருந்ததாகவும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என்றும் குருக்கள் கூறியிருந்த நிலையில் எனிவரும் காலங்களிலும் பிரச்சார நடவடிக்கைகளுக்கு இடமளிக்கக் கூடாது என்ற அறிவுறுத்தலுடன் வழக்கு முடிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் பொலிசாருக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் மீள் முறைப்பாட்டினடிப்படையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி மணிவண்ணன், தமிழ்த் தேசியப் பேரவையின் வலிவடக்கு வேட்பாளர் தாயுமானவர் நிகேதன், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் இரட்ணஜீவன் எச்.கூல் முறைப்பாட்டாளரான தமிழரசுக் கட்சி வேட்பாளர் சுகிர்தன் ஆகியோர் மல்லாகம் நீதிமன்றுக்கு இன்று அழைக்கப்பட்டிருந்தனர்.
நீதிமன்றில் குறிப்பிட்ட பொலிஸ்தரப்பு
தாங்கள் விசாரணை மேற்கொண்ட அடிப்படையில் ஆலயப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் இடம்பெற்றிருக்கவில்லை என்றும் முகநூல்களில் இருந்து எடுக்கப்பட்டு முறைப்பாட்டாளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட புகைப்படங்கள் ஆலய வழிபாடுகளில் ஈடுபடும் புகைப்படங்களே என்றும் மன்றில் தெரியப்படுத்தினர்.
எதிராளிகள் சார்பில் 12 சட்டத்தரணிகள்
குறித்த வழக்கில் தமிழ்த் தேசியப் பேரவை மறற்றும் குருக்கள் சார்பில் 12 சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர். சட்டத்தரணிகள் குருபரன், காண்டீபன், ஜெயரூபன், பார்த்தீபன், ஜோய் மகிழ் மகாதேவா, லலிதாஸ் சர்மா,
சுபாஷ்கரன், றோய், கீர்த்தனா, தனுஜா, கஸ்தூரி ஆகியோருடன் சுகாஸ் அவர்களும் ஆஜராகியிருந்தனர்
சட்டத்தரணி கு.குருபரன் குறிப்பிட்டபோது…
இன்நிலையில் சட்டத்தரணி மண்வண்ணன் சார்பில் ஆஜரான சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன்குறித்த வழக்கு தனது கட்சிக்காரான சட்டத்தரணி மணிவண்ணனுக்கும் அவரது கட்சியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் அவர்கள் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியப் பேரவைக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் தமிழரசுக் கட்சி வேட்பாளர் ஒருவர் ஊடாக தமிழரசுக் கட்சியால் திட்டமிடப்பட்டு சோடிக்கப்பட்ட வழக்கு என்று வாதிட்டார்.
நடுநிலையாக இருக்கவேண்டிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரான இரட்ணஜீவன் கூல் என்பவர் குறித்த வழக்கில் தமிழரசுக் கட்சிசார்ந்து இயங்குவதாகவும் அவர் திட்டமிட்டு தமிழ்த் தேசியப் பேரவையினருக்கு எதிரக செயற்படுவதாகவும் குறிப்பிட்டார். தமிழரசுக் கட்சிக்கு ஆதரவாகவும் தமிழ்த் தேசியப் பேரவைக்கு எதிராகவும் குறிப்பிட்ட சட்டத்தரணி குருபரன் ரட்ணஜீவன் கூலினால் எழுதப்பட்ட சில கட்டுரைகளின் ஆதராங்களையும் மன்றில் சமர்ப்பித்தார்.
பொலிசாருக்கும் நீதிபதிக்கும் தமிழ்த்தேசியப் பேரவையினருக்கும் குறிப்பாக சட்டத்தரணி மணிவண்ணனுக்குமிடையில் பெரியளவிலான டீல் ஒன்று இருப்பதாகவும் அண்மையில் எழுதிய கட்டுரை ஒன்றில் ரட்ணஜீவன் கூல் குறிப்பிட்டிருந்தார். இதனை சுட்டிக்காட்டிய சட்டத்தரணி குருபரன் இது நீதித்துறையையும் பொலிஸ்துறையையும் அவமதிக்கும் செயல் எனச் சுட்டிக்காட்டியதோடு ஒரு நாட்டின் ஜனநாயகத்தின் இரு முக்கிய துறைகளான நீதித்துறை மற்றும் தேர்தர்கள் திணைக்களம் ஆகிய இரண்டையும் தேர்தல் திணைக்களத்தில் பணியாற்றும் ஒரு அதிகாரி கேள்விக்குள்ளாக்கியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
சட்டத்தரணி சுகாஸ் குறிப்பிட்டபோது
இதேவேளை சட்டத்தரணி சுகாஸ் குறிப்பிட்டபோது
குறித்த வழக்கு வேண்டும் என்றே சோடிக்கப்பட்டது எனவும் இது இந்து மத மக்களையும் மதகுருமாரையும் ஆலய நிர்வாகத்தினரையும் புண்படுத்தும் செயல் எனக் குறிப்பிட்டதோடு சிலர் தங்கள் சுயநலன்களின் அடிப்படையில் சட்சி நலன்சார்ந்து குறித்த வழக்கினை சோடித்துள்ளதாக குறிப்பிட்டார்.
வழக்கு தள்ளுபடி
வாதங்களைக் கேட்ட நீதிபதி சாட்சியங்கள் போதுமான இல்லை எனவும் வழக்கு தொருடர் சார்பில் மேலதிகமாக சாட்சிங்கள் ஏதும் இல்லாத நிலையில் வழக்கை மேற்கொண்டு நடத்த முடியாதெனவும் குறிப்பிட்டு வழக்கினைத் தள்ளுபடி செய்தார்.
கூல் இற்கு எதிராக நடவடிக்கை ?
இந்நிலையில் நடுநிலையான சுயாதீனமான அமைப்பான தேர்தல்கள் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் கட்சி சார்ந்து இயங்குவதாக சட்டத்தரணிகளால் சில ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில் குறித்த வழக்குத் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கைக்கான விசாரணைகோரும்வகையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவுக்கு தெரியப்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.