ஈரோடு ரெயில் நிலையத்தில் திருச்சி பயணிகள் ரெயிலுக்கு கொண்டு வரப்பட்ட என்ஜின் தடம் புரண்டதையொட்டி அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. ஈரோட்டில் இருந்து திருச்சிக்கு வழக்கம் போல் காலை 7.30 மணிக்கு பயணிகள் ரெயில் புறப்பட்டு செல்லும்.
அதே போல் இன்று திருச்சி பயணிகள் ரெயில் ஈரோடு ரெயில் நிலைய 4-வது பிளாட்பார்மில் நின்று கொண்டிருந்தது. பயணிகள் ஏறி அமர்ந்தனர்.
அந்த ரெயிலுக்கு என்ஜின் ஈரோடு ரெயில் நிலைய செட்டிலிருந்து கொண்டு வரப்பட்டது. ரெயில் அருகே அந்த என்ஜின் வந்த போது திடீரென தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி தடம் புரண்டது. இதனால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி ரெயில் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் அங்கு விரைந்து வந்தனர்.
உடனடியாக தடம் புரண்ட ரெயில் என்ஜினை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரத்துக்கு பிறகு என்ஜின் தூக்கி தண்டவாளத்தில் நிலை நிறுத்தப்பட்டது.
இந்த என்ஜின் தடம் புரண்டதையொட்டி 4-வது பிளாட்பார்ம் வழியாக வரும் ரெயில்கள் வேறு தடங்களில் திருப்பி அனுப்பப்பட்டது.
காலை 7.30 மணிக்கு புறப்பட வேண்டிய ஈரோடு- திருச்சி பயணிகள் ரெயில் 3 மணி நேர தாமதத்துக்கு பிறகு புறப்பட்டு சென்றது.ரெயில் என்ஜின் தடம் புரண்டதையொட்டி ஈரோடு ரெயில் நிலையத்தில் இன்று காலை பரபரப்பான சூழ்நிலை நிலவியது.