மாதவரம் – சோழிங்கநல்லூர் 2-வது கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் ஜப்பான் நாட்டு தொழில் நுட்பத்தில் அமைக்கப்பட உள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட்டது.
கோயம்பேடு – ஆலந்தூர், சின்னமலை- விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம்- நேருபூங்கா வரை சுரங்கப் பாதையிலும் மெட்ரோ ரெயில் போக்குவரத்து சேவை தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் 2-வது கட்டமாக மாதவரம் – சோழிங்கநல்லூர் வரை மெட்ரோ ரெயில் திட்டம் வரைவில் தொடங்கப்பட உள்ளது. ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் இப்பணிகள் நடைபெற உள்ளன.
ஜப்பான் நாட்டு நிதி உதவியுடன் இந்த திட்டப் பணிகள் தொடங்கப்படுகிறது. இதற்காக ஜப்பான் நாட்டு குழுவினர் சென்னை வந்தனர். 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். கடன் உதவி வழங்குவது தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.
2-வதுகட்ட மெட்ரோ ரெயில் திட்ட கட்டுமான பணிகள் தவிர அனைத்து பணிகளும் ஜப்பான் நாட்டு தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட உள்ளது. நவீன ரெயில்கள் வடிவமைப்பு, சிக்னல், தொலைதொடர்பு வசதிகள் ஜப்பான் நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படுகின்றன.
இது குறித்து மெட்ரோ ரெயில் திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
2-வது கட்டமாக மாதவரம்- சோழிங்கநல்லூர் வரையிலான மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் இந்த திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன. ஜப்பான் நாட்டு நிதிஉதவியுடன் பணிகள் தொடங்குகிறது.
இது தொடர்பாக ஜப்பான் நாட்டு குழுவினர் சென்னையில் ஆலோசனை நடத்தினார்கள். திட்டப் பணிகள் குறித்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. மெட்ரோ பணிகள் அனைத்தும் ஜப்பான் நாட்டு நவீன தொழில்நுட்பத்தில் நடைபெற உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்