தகுதி நீக்க கால வரம்பு வழக்கு: நவாஸ் ஷெரீப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு சம்மன்

312 0

தகுதி நீக்க கால வரம்பு வழக்கு தொடர்பாக அடுத்த கட்ட விசாரணையின் போது முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் ஜகாங்கிர் தரீன் ஆகியோரை கோர்ட்டில் ஆஜராக கூறி அவர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது.

பனாமா கேட் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதே போல் பாகிஸ்தான்-தெரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவராகவும், எம்.பி.யுமாக இருந்த ஜகாங்கிர் தரீன், தேர்தலின் போது வேட்பு மனுவில் தனது சொத்து விவரங்களை குறிப்பிடாமல் மறைத்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

பாகிஸ்தான் அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 62(1) (எப்) கீழ் வழங்கப்படும் இந்த தகுதி நீக்க தண்டனை வாழ்நாள் முழுவதற்குமானதா? அல்லது குறிப்பிட்ட காலத்திற்கானதா? என்கிற கேள்வி அங்கு பரவலாக எழுந்தது. இதையடுத்து பாகிஸ்தான் எம்.பி.க்கள் பலர் தகுதி நீக்க தண்டனைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.

தலைமை நீதிபதி மியான் சாஹிப் நிசார் தலைமையில் 5 நீதிபதிகளை கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் முடிவில், சட்டப்பிரிவு 62(1) (எப்) கீழ் வழங்கப்படும் தகுதி நீக்க தண்டனைக்கான கால அளவு நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையின் போது முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் ஜகாங்கிர் தரீன் ஆகியோரை கோர்ட்டில் ஆஜராக கூறி அவர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது. விசாரணையின் போது அவர்கள் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களையும், கேள்விகளையும் முன் வைக்க சம்மனில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Leave a comment