ஜனாதிபதியுடனான விசேட கூட்டத்தில் மஹிந்த அணி, ஜே.வி.பி. கலந்துகொள்ளவில்லை

272 0

பிணை முறிகள் மற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ள குற்றவாளிகளுக்கெதிராக வழக்கு தாக்கல் செய்யும் பணிகளை தான் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய  உறுதியளித்துள்ளார்.

பிணைமுறி ஆணைக்குழு அறிக்கையுடன் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கான விசேட கட்சித் தலைவர்களின் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று(29) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு அறிக்கைகள் குறித்து விளக்குகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

வழக்குத் தொடருதல் மற்றும் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட  நட்டத்தை மீட்டெடுப்பதற்காக மேற் கொள்ளப்பட வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்து சட்ட மா அதிபர், மத்திய வங்கி ஆளுநர் மற்றும் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் விரிவாக விளக்கமளித்துள்ளனர்.

ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கேற்ப அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்குத் தேவையான புதிய சட்டங்களை உருவாக்குதல் மற்றும் ஏற்கனவேயுள்ள கட்டளைச் சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான வரைபுகளை தயாரிக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில், மஹிந்த ஆதரவு அணி மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகள்  கலந்து கொள்ளவில்லை. அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் மஹிந்த ஆதரவு அணியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் தினேஷ் குணவர்தன ஆகிய இருவரும் தங்களால் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாதென ஜனாதிபதியின் செயலாளருக்கு அறிவித்திருந்ததாக கூறப்படுகின்றது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஹெல உருமய கட்சி, ஈழ மக்கள் ஜனநாயக முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி அக்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

Leave a comment