காவிரி நதிநீர் பிரச்சினை குறித்து 8-ந் தேதிக்கு பிறகு பிரதமரை நேரில் சந்திக்க முடிவு முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் பேட்டி அளித்துள்ளார்.
இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்க தலைவரும், தி.மு.க. முன்னாள் எம்.பி.யுமான கே.பி.ராமலிங்கம் ராசிபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
8-ந் தேதிக்கு பின்னர் அனைத்து விவசாய சங்கங்கள் ஒன்று சேர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து காவிரி நதி நீர் பிரச்சினை குறித்து பேச உள்ளோம். அதற்கான தேதி பிரதமர் அலுவலக ஒப்புதலுக்கு பின்னர் தெரியும்.
காவிரி பிரச்சினை தொடர்பாக பிரதமரை நேரில் சந்திக்க கோரி நான் எழுதிய கடிதத்திற்கு, பிரதமர் அலுவலகத்தில் இருந்து இந்த மாதம் 8 ந் தேதிக்கு பின்னர் தேதி வழங்கப்படும் என்று பதில் கடிதம் வந்துள்ளது.
பிரதமரை நேரில் சந்திக்கும் போது, காவிரி ஆணையம் மற்றும் நீர் பங்கீட்டை ஒழுங்குப்படுத்தும் நெறிப்பாட்டு குழுவை உடனடியாக அமைக்க வலியுறுத்துவோம்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி ஆணையம் செயல்படும் போது அரசுகள் தலையிட முடியாத நிலை ஏற்படும்.
இதனால் இரண்டு அரசுகளுக்கு இடையே பிரச்சினைகள் இருக்காது. எனவே பிரதமர் உடனடியாக ஆணையத்தை நிறுவ நடவடிக்கை எடுக்கும்படி அவரிடம் வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.