அரச வருமானத்தில் 22 பில்லியன் ரூபா சேமிப்பு

289 0

நாட்டின் கடந்த 63 வருட வரலாற்றில் முதற்தடவையாக அரச வருமானத்தில் 22 பில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியமும் இலங்கை மத்திய வங்கியும் இதனை உறுதிப்படுத்தியுள்ளன. கடந்த மூன்றாண்டுகளில் அரசாங்கத்தின் பொருளாதார கொள்கை முறையான வேலைத்திட்டம் என்பனவற்றினால் கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் 5.5 சதவீதம் வரை அதிகரித்திருந்தது. வருமானம் ஈட்டும் எந்த அரச நிறுவனமும் தனியார் மயப்படுத்தப்படவில்லை. கடந்த 63 வருட வரலாற்றில் முதற்தடவையாக அரச வருமானத்தில் 22 பில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் அரசாங்கம் லாபத்தை இழந்திருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தேர்தலை இலக்காக கொண்டு பரப்பப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாரிய கடன் சுமையில் இருந்த நாட்டின் பொருளாதாரத்தை மக்களுக்கு சுமை ஏற்படுத்தாத வகையில் முகாமைத்துவம் செய்து அரச கடன் பெறுகையை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டில் 13 தசம் மூன்று சதவீதமாக காணப்பட்ட அரச வருமானம் 2016 ஆம் ஆண்டில் 14 தசம் நான்கு சதவீதம் வரை அதிகரித்திருந்தது. இலங்கை மத்திய வங்கி 2016ம் ஆண்டு காலப்பகுதியில் 22 பில்லியன் ரூபாவை லாபமாக ஈட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது என்றும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

Leave a comment