பஸ் கட்டண உயர்வு: மின்சார ரெயில்களில் அலைமோதும் கூட்டம்

286 0

பஸ் கட்டண உயர்வுக்கு பிறகு மக்களின் பார்வை மின்சார ரெயில் மீது விழுந்துள்ளதால் காலை 6 மணிக்கே ரெயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. தமிழகத்தில் கடந்த 20-ந்தேதி பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டன.

சென்னையில் மக்கள் அதிகளவில் மாநகர பஸ்களை பயன்படுத்தினர். பஸ் கட்டண உயர்வையடுத்து நடுத்தர மக்கள், தொழிலாளர்கள் நாகராஜன் மின்சார ரெயில் பயணத்துக்கு மாறினார்கள்.

பஸ் பயணத்துக்கே குறிப்பிட்ட தொகையை செலவு செய்ய வேண்டி இருப்பதால் மக்களின் பார்வை மின்சார ரெயில் பக்கம் திரும்பியது.

நீண்ட தூரம் செல்பவர்கள் முடிந்தவரை மின்சார ரெயிலில் பயணம் செய்து செலவை குறைத்தனர். பாதி தூரம் ரெயிலில் சென்று விட்டு அதன்பின் மாநகர பஸ்களில் செல்கிறார்கள். இதன் மூலம் பயண செலவை குறைக்கிறார்கள்.

சென்னையில் தினமும் மின்சார ரெயில் சேவை அதிகாலை 4 மணிக்கு தொடங்கும். 6.30 மணி வரை ரெயிலில் குறைந்த அளவே கூட்டம் இருக்கும். 7 மணிக்கு பிறகே கூட்டம் அதிகரிக்க தொடங்கும்.

தற்போது பஸ் கட்டண உயர்வுக்கு பிறகு மக்களின் பார்வை மின்சார ரெயில் மீது விழுந்துள்ளதால் காலை 6 மணிக்கே ரெயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரிப்பதால் தினமும் ரெயில்களில் வழக்கத்தைவிட பயணிகள் கூட்டம் அதிகரித்து நிரம்பி வழிகிறது.

இதனால் காலை, மாலை நேரங்களில் ரெயில் நிலையங்களில் நெரிசல் ஏற்படுகிறது.

மேலும் தென் மாவட்ட ரெயில்களில் வருபவர்களும் தாம்பரத்தில் இறங்கி மின்சார ரெயில்களில் பயணம் செய்கிறார்கள். இதன் மூலம் ரெயில்வேக்கு கூடுதல் வருவாய் கிடைத்து வருகிறது.

பஸ் கட்டண உயர்வுக்கு பிறகு கடந்த 20-ந்தேதி முதல் 7 நாட்களில் வழக்கத்தை விட கூடுதலாக 2.7 லட்சம் பேர் பயணம் செய்து இருக்கிறார்கள். மேலும் ஒரு வாரத்தில் சீசன் டிக்கெட் எடுப்பவர்கள் எண்ணிக்கை 5½ லட்சமாக உயர்ந்து இருக்கிறது.

காகிதமில்லா டிக்கெட் சேவையில் 2 லட்சம் பேர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் சென்னை கோட்டத்தில் 20-ந்தேதி முதல் 7 நாட்களில் ரு.1.95 கோடி கூடுதலாக ரெயில்வேக்கு வருமானம் கிடைத்துள்ளது.

Leave a comment