வடக்கு மாகாண சபை, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் கோரிக்கைகளைப் புறக்கணித்து, காங்கேசன்துறையில் மகிந்த ராஜபக்சவால் அமைக்கப்பட்ட சொகுசு மாளிகையை வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் கையளிக்கும் முனைப்பில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன ஈடுபட்டுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காங்கேசன்துறையில் முன்னைய ஆட்சிக்காலத்தில் சொகுசு அரச தலைவர் மாளிகை அமைக்கப்பட்டது. 20 சிறப்பு அறைகள், சொகுசு வசதிகள், இரண்டு நீச்சல் தடாகங்கள் மற்றும் வதிவிட வசதிகளுடன் அமைக்கப்பட்ட இந்த மாளிகை பற்றிய இரகசியங்கள், 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்குப் பின் அம்பலமாகின.
இந்தச் சொகுசு மாளிகையை தமது தேவைக்குப் பயன்படுத்தப் போவதில்லை என்று அரச தலைவராகப் பதவியேற்ற மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.
இந்த நிலையில், காங்கேசன்துறை சொகுசு மாளிகையை, தம்மிடம் கையளிக்குமாறு வடக்கு மாகாணசபை கோரிக்கை விடுத்திருந்தது. கல்வி மையமாகப் பயன்படுத்துவதற்கு அதனைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் கோரிக்கை விடுத்திருந்தது.