1990ஆம் ஆண்டிலிருந்து படையினரின் ஆக்கிரமிப்பிலிருந்த மயிலிட்டி காசநோய் மருத்துவமனை நேற்று உத்தியோக பூர்வமாக விடுவிக்கப்பட்டது. மருத்துவமனை மற்றும் அதனுடன் இணைந்த 3 ஏக்கர் நிலப் பரப்பு மாவட்டச் செயலகத்திடம் படைத்தரப்பினரால் நேற்றுக் கையளிக்கப்பட்டது.
வலிகாமம் இடப்பெயர்வுடன் மயிலிட்டிப் பிரதேசம் முழுமையாக பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. மயிலிட்டித் துறைமுகம் உள்ளிட்ட மயிலிட்டிப் பிரதேசம் விடுவிக்கப்பட முடியாது என்று கூறப்பட்டு வந்த நிலையில், மயிலிட்டித் துறைமுகம் கடந்த ஆண்டு மக்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
மயிலிட்;டி காசநோய் மருத்துவமனையை பாதுகாப்புத் தரப்பினர் சுற்றுலா விடுதியாகப் பயன்படுத்தி வந்தனர். இதனால் அதுவும் விடுவிக்கப்படாது என்று கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில், மயிலிட்டி காசநோய் மருத்துவமனை பாதுகாப்புத் தரப்பினரால் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளது. விடுவிப்புக்குரிய உத்தியோகபூர்வக் கடிதம், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் சு.முரளிதரனிடம் படைத்தரப்பினரால் நேற்றுக் கையளிக்கப்பட்டுள்ளது.
மாவட்டச் செயலகத்தினால் உடனடியாகவே யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையிடம் அது ஒப்படைக்கப்பட்டுள்ளது.