காவிரி பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர தமிழக எம்.பி.க்கள் இணைந்து குரல் கொடுக்கவேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் திங்கட்கிழமை (இன்று) தொடங்குகிறது. ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் இந்த கூட்டத்தொடரில் மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றவும், அறிவிக்கப்பட்ட திட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டதா? என்பதை பற்றியும் விவாதிக்கும் கூட்டமாக அமையவேண்டும். காவிரி பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சினை, விவசாயிகள் கடன் பிரச்சினை, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு உள்பட பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றன.
தீர்க்கப்படாத பிரச்சினைகளை தீர்க்கும் கூட்டதொடராக இது இருக்கவேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்களுக்கு தேவையான திட்டங்களை தீட்டி அதை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முன்வரவேண்டும். மக்களுக்கு பயன்அளிக்கும் வகையில் பட்ஜெட் இருக்கவேண்டும். தமிழகத்தை சேர்ந்த அனைத்து எம்.பி.க்களும் இணைந்து குரல் கொடுத்து காவிரி பிரச்சினை மற்றும் மீனவர்கள் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரவேண்டும்.