மக்களின் நலன் கருதி பஸ் கட்டணத்தை மேலும் குறைக்க வேண்டும் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே தொழுதூருக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வந்தார்.
அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டை கடந்த 50 ஆண்டுகளாக ஆண்டு வரும் திராவிடக்கட்சிகள் மக்களின் மனதில் இடம் பெறாமல் தோற்று விட்டன. திராவிட கட்சிகளின் ஆட்சியை மாற்ற வேண்டும் என தமிழ்நாட்டு மக்கள் தற்போது விரும்புகின்றனர்.
உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை தமிழக அரசு தற்போது குறைத்துள்ளது. இது போதாது. மக்களின் நலன் கருதி பஸ் கட்டணத்தை மேலும் குறைக்க வேண்டும்.
ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும் என்று ராணுவ மந்திரி நிர்மலா சீத்தாராமனிடம் நான் கோரிக்கை வைத்தேன். அதற்கு அவர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
ராமநத்தம் அருகே ஆவட்டி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்ட உரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணி விரைவில் தொடங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.