தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கு இணைப்பைக் கைவிட்டுள்ளது. ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்கு இணங்கி விட்டது என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், வடக்கு கிழக்கு இணைந்த மாகாணத்துக்குள் கூட்டாட்சிக் (சமஷ்டி) கட்டமைப்புக்குள்ளே அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகள் செயற்படுத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சித் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்கான, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை வவுனியாவில் நேற்று வெளியிடப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, புளொட், ரெலோ ஆகிய கட்சித் தலைவர்களின் கையெழுத்துடன் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கையில் அரசியல் தீர்வு தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாடு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் தனித்துவமிக்க தேசிய இனம், வடக்குக் கிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசும் மக்களது பூர்வீக வாழ்விடங்கள், தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான மக்கள் என்ற அடிப்படையில் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர், கூட்டாட்சி (சமஷ்டி) கட்டமைப்புக்குள்ளே ஒன்றுபட்ட வடக்குக் கிழக்கு அலகைக் கொண்ட அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகள் தொடர்ந்து செயற்படுத்தப்பட வேண்டும்.
தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும் பகிரப்படும் அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகளின் மூலம் நன்மைகளைப் பெற உரித்துடையவர்.பகிரப்பட்ட இறையாண்மையின் அடிப்படையில் உருவாக்கப்படும் அதிகாரப் பகிர்வானது நிலம், சட்டம் ஒழுங்கு, சட்டத்தை நடைமுறைப்படுத்தல், தமிழ் மக்களின் பாதுகாப்பு, சமூக பொருளாதார அபிவிருத்தி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், கல்வி, உயர்கல்வி, தொழிற்பயிற்சி, விவசாயம், கைத்தொழில், கடற்றொழில், கால்நடை அபிவிருத்தி, மொழி, பண்பாடு முதலியவற்றின் மீதும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் திரட்டிக் கொள்ளும் வளங்கள் மற்றும் நிதி அதிகாரம் மீதான ஏனைய விடயங்கள் தொடர்பானதாகவும் இருத்தல் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.