கச்சத்தீவில் அமைந்துள்ள புனித அந்தோனியார் தேவலாயத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் இந்திய – இலங்கை பக்தர்களின் மத நல்லிணக்க விழா பெப்ரவரியில் நடைபெற உள்ளதை தொடர்ந்து விழாவுக்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் ஆவனங்கள் குறித்து நேற்று ராமேஸ்வரம் வட்டாச்சியர் அலுவலகத்தில் ஆலோசணை கூட்டம் ஒன்று நடைபெற்றது .
கூட்டத்தில் பேசிய மாவட்ட வருவாய் கோட்டாச்சியர், எதிர்வரும் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் கச்சத்தீவில் அமைந்துள்ள புனித அந்தோனியார் ஆலயத்தில் திருவிழா நடைபெற உள்ளது.
பொலிஸாரிடம் தடையில்லா சான்று பெற்றவர்கள் விழாவிற்கு செல்ல அனுமதிக்கப்பட உள்ளனர். விழாவிற்கு செல்லக்கூடிய பக்தர்களிடம் அரசு வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கட்டாயமாக இருக்க வேண்டும்.
மேலும் இலங்கை அகதிகளுக்கு அனுமதி கிடையாது எனவும், தடை செய்யப்பட்ட பொலித்தீன் பொருட்கள், போதைப் பொருட்கள் மற்றும் கடத்தல் பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது எனவும் மாவட்ட வருவாய் கோட்டாச்சியர் தெரிவித்தார்.
இதேவேளை கச்சத்தீவுக்குச் செல்லும் பயணிகள் குறித்து முழு விசாரணை நடத்தப்பட்டு, அதன் விபரம் கிடைத்த பின்னர் அவர்கள் பயணம் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பாதுகாப்பு நலன் கருதி பெப்ரவரி மாதம் 21 திகதி வரை மட்டுமே மீனவர்களுக்கு மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.