தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள் என்ன? என்பதை எந்த அரசியல் கட்சியும் கூறியது கிடையாது என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் வணிகர் சங்க பிரதிநிதிகள் இடையேயான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் எந்த திட்டம் கொண்டு வந்தாலும், அதை அரசியல் கட்சியினர் எதிர்க்கிறார்கள். இதனால் தான் பல திட்டங்கள் பிற மாநிலங்களுக்கு செல்கின்றன. தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள் என்ன? என்பதை எந்த அரசியல் கட்சியும் கூறியது கிடையாது.
திருச்செங்கோடு, ராசிபுரம், நாமக்கல் ஆகிய ஊர்களில் புதிய திட்டங்கள் வெற்றி பெறுகின்றன. இதற்கு காரணம் கடுமையாக உழைப்பவர்கள் அங்கு உள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் பா.ஜனதாவில் இணைந்து வருகிறார்கள். மன்னை எக்ஸ்பிரஸ் ரெயிலை மாற்று பாதையில் இயக்கக்கூடாது என வணிகர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். இதை ரெயில்வே அமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்வேன்.
மற்றவர்களை அசிங்கமாக பேசுவதும், ஆயுதங்களை கையில் எடுப்பதும் துறவிகளின் பழக்கம் கிடையாது. எங்களுக்கும் ஆயுதம் எடுக்க தெரியும், ஆனால் எடுக்க மாட்டோம் என சடகோப ராமானுஜ ஜீயர் பேசியதை சிலர் தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.
பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடும் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ.வையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என ஆயிரக்கணக்கானோர் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை-விக்கிரவாண்டி இடையேயான நான்கு வழிச்சாலை பணிகள் 1½ ஆண்டுக்குள் முடிவடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.