முதல் – அமைச்சர், துணை முதல்-அமைச்சர் வருகையால் மதுரையில் கவர்னரின் ஆய்வுப் பணியில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நாளை (29-ந்தேதி) நடக்கிறது. இதில் தமிழக கவர்னரும், பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித் பங்கேற்கிறார்.
இதற்காக நேற்று (27-ந் தேதி) இரவு மதுரை வந்து அரசு சுற்றுலா மாளிகையில் தங்கும் அவர் இன்று (28-ந்தேதி) மதுரையில் தூய்மை பாரத இயக்கப் பணிகளை பார்வையிடுவதோடு பொதுமக்களிடம் மனுக்களை பெறவும், அதிகாரிகளுடன் ஆய்வுப்பணி மேற்கொள்ளவும் திட்டமிட்டு இருந்தார்.
இதற்கிடையே இன்று காலை அமைச்சர் செல்லூர் ராஜூவின் பேரக் குழந்தைகள் காதணி விழாவில் பங்கேற்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கவர்னருடன் ஆய்வுப்பணியில் பங்கேற்கலாம் என தகவல் வெளியானது. அதற்கு ஏற்ற வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.
இந்த நிலையில் கவர்னரின் வருகையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி அவர் நேற்று மதுரை வரவில்லை.
இன்று இரவு விமானம் மூலம் மதுரை வரும் கவர்னர் அரசு சுற்றுலா மாளிகையில் தங்குகிறார். நாளை காலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.
மாைலையில் தூய்மை பாரத இயக்கப்பணிகள் ஆய்வில் பங்கேற்பதோடு பொதுமக்களிடம் விருந்தினர் மாளிகையில் மனுக்களையும் பெறுகிறார். அதன்பிறகு இரவு 7.35 மணிக்கு விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் செல்கிறார்.
முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் இன்று மதுரையில் முகாமிட்டுள்ள நேரத்தில் கவர்னரும் ஆய்வு பணி மேற்கொண்டால் பாதுகாப்பு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டே கவர்னர் வருகையில் மாற்றத் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.