சமீபத்தில் உயர்த்தப்பட்ட தமிழக அரசு பேருந்து கட்டணங்கள் மறுபரிசீலனை செய்யப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தேனியில் பேட்டியளித்துள்ளார்.
தமிழக அரசு கடந்த 19-ந் தேதி அரசு போக்குவரத்து கழக பஸ்களின் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. மாநகர பஸ்களில் 3 ரூபாயாக இருந்த குறைந்த பட்ச கட்டணம் 5 ரூபாயாகவும் அதனுடன் விபத்து காப்பீடு மற்றும் சுங்க வரிக்காக கூடுதலாக 1 ரூபாயும் சேர்த்து 6 ரூபாயாக வசூலிக்கப்படுகிறது. இதுபோல் வெளியூர் பஸ்கள், விரைவு பஸ்கள், குளிர் சாதன பஸ்கள் என ஒவ்வொன்றுக்கும் ஏற்றவாறு கட்டணம் உயர்த்தப்பட்டது.
இந்த கட்டண உயர்வுக்கு எதிராக கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் சாலை மறியல், கல்லூரி புறக்கணிப்பு என போராட்டங்களில் இறங்கினர். மேலும், தி.மு.க, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நேற்று மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
வரும் திங்கள் அன்று பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட உள்ளதாக அவர்கள் அறிவித்தனர். இது மட்டுமல்லாமல் கட்டண உயர்வுக்கு பின்னர் அரசுப்பேருந்துகளில் மக்கள் கூட்டம் குறைந்து காணப்படுகிறது. இதனால், தினமும் 10 கோடி அளவில் வருமான இழப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தேனியில் போலியோ சொட்டுமருந்து வழங்கும் நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டார். அப்போது எதிர்க்கட்சிகள் போராட்டம் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, கட்டண உயர்வு தொடர்பாக மறுபரிசீலனை செய்யப்படும் என அவர் கூறினார்.
மேலும், கோவையில் நடக்க உள்ள ஜல்லிக்கட்டு அழைப்பிதழில் தனது பெயர் இல்லாதது குறித்து கவலைப்படவில்லை எனவும் அவர் கூறினார்.