நாட்டின் மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கிலேயே சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதனால் இலங்கை மீன்பிடி சட்டத்தில் இந்தியாவுக்கு ஏற்ற வகையில் திருத்தங்களை மேற்கொள்ள முடியாது எனவும் கடற்றொழில் நீரியில்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இலங்கை மீன்பிடி சட்டத்தில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் திருத்தத்துக்காக போராட்டம் நடத்துவதை தவிர்த்து இந்திய மீனவர்கள் எல்லை தாண்டாது தமது கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பதே சிறந்தது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை கடல் எல்லைப் பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் நடவடிக்கையை தடுப்பதற்காக, அதிக அபராதம் விதிப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்து, இலங்கை மீன்பிடி சட்டத்தில் திருத்தம் மேறகொள்ளப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய பிரதமர் நரோந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் கடிதம் எழுதியிருந்தார்.
இது தொடர்பாக விளக்கமளிக்கும் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர இவ்வாறு குறிப்பிடதாக அரச தகவல் திணைக்களம் கூறியுள்ளது.
அத்துடன் எமது நாட்டுக்குள் சட்டவிரோதமாக வரும் எந்தவொரு வெளிநாட்டு மீன்பிடி படகுகளுக்கும் இடமளிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர், இந்தியர்களின் சம்பிரதாயபூர்வமான மீன்பிடித் தொழிலை முன்னெடுப்பதற்கு எமது கடற் பிரதேசத்தில் இடமளிக்காது என்பதில் இலங்கை அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.