வஸீம் தாஜுடீன், லசந்த விக்ரமதுங்க, முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன் ஆகியோர்களின் கொலை விசாரணை நடவடிக்கைகளை துரிதப்படுத்தி அதன் உண்மை நிலை நாட்டுக்குப் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுப்பாராயின் மக்கள் அவரை மற்றுமொரு தடவை நாட்டின் ஜனாதிபதியாக்குவார்கள் என அமைச்சர் பி. ஹெரிசன் தெரிவித்தார்.
பொலநறுவை,ஹிங்குரான்கொடயில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மத்திய வங்கி பிணைமுறி அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி அடிக்கடி கருத்து தெரிவித்து வருகிறார். அந்நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அவர் பிரதமரிடமும் அனுமதி கோரியுள்ளார். எனவே தவறு செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் எவ்விதப் பிரச்சினையும் இல்லை. அதனை ஐக்கிய தேசியக் கட்சி வரவேற்கிறது.
ஊழல் மோசடிகளுக்கு எதிரான கொள்கையில் ஐக்கிய தேசியக் கட்சி என்றும் உறுதியாக உள்ளது. அது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுக்கும் சகல நடவடிக்கைகளுக்கும் நாம் ஒத்துழைப்பு வழங்குவோம். மேலும் தற்போது பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை வெளியாகின்ற சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் அவரது தரப்பினரும் மண்ணெண்ணெய் பட்ட சாரைப்பாம்புபோல் தவிக்கின்றனர். அவர்கள் செய்த பிழைகள் வெளிவரவுள்ளதனாலேயே இவ்வாறு திணறுகின்றனர்.
மேலும் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஹெஜின் உடன்படிக்கை,மிக் விமான உடன்படிக்கை என்பவற்றுக்கும் ஆணைக்குழு அமைத்து விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ காலத்தில் வெளிநாட்டு வங்கிகளில் பணம் வைப்பிலிடப்பட்டிருப்பின் அவற்றையும் நாட்டுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் வஸீம் தாஜுடீன், லசந்த விக்ரமதுங்க, முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன் ஆகியோர்களின் கொலை விசாரணை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு அதன் உண்மை நிலை நாட்டுக்குப் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.
அதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுப்பாராயின் மக்கள் அவரை மற்றுமொரு தடவை நாட்டின் ஜனாதிபதியாக்குவதற்கு முன்னிற்பார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.