தியாகிகள் ஓய்வூதியத்துக்காக 37 ஆண்டுகள் போராடி வென்ற வியாசர்பாடி தியாகி காந்தி நீதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளாகி விட்டது. சுதந்திரத்தை பெற்று தருவதற்காக போராடிய சுதந்திர போராட்ட வீரர்களின் நிலைமை இப்படியா? உள்ளது என்று நீதிமன்றம் கேள்வி கேட்கும் நிலையே இன்னமும் நீடிப்பது வேதனை அளிக்கும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் இன்று 69-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி காந்தி, கடந்த 37 ஆண்டுகளாக ஓய்வூதியம் பெறுவதற்கு போராடி வந்திருப்பதும் இதற்கு ஐகோர்ட்டு நீதிபதி கடும் கண்டத்தை தெரிவித்திருப்பதும் அதிர்ச்சி அளிக்கும் செய்தியாகவே உள்ளது.
சென்னை வியாசர்பாடி சேர்ந்த தியாகி காந்தி தியாகிகள் பென்ஷனை பெற கடுமையாக போராடியுள்ளார். இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் அருகே உள்ள கீழ்சாக்குளம் கிராமம். தந்தை வழிவிட்டா தேவர். பர்மாவில் குடியேறியவர். அங்குதான் காந்தி 1926-ல் பிறந்தார். நேதாஜி படையில் சேர்ந்து 1942-ல் வெள்ளையர்களுக்கு எதிராக சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அடிமைப்பட்டு கிடந்த நமது நாடு விடுதலை பெறுவதற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து துப்பாக்கி ஏந்தியும், தியாகி காந்தி போராடியுள்ளார். அப்போது ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு பர்மா சிறையில் 6 மாதம் சிறை தண்டனை அனுபவித்துள்ளார்.
இதன் பின்னர் 1964-ல் அகதியாக தமிழகம் திரும்பிய காந்தி செங்குன்றம் அருகே உள்ள பாடியநல்லூரில் இவர் வசித்து வந்தார். தற்போது வியாசர்பாடி பக்தவச்சலம் காலனியில் வசித்து வரும் மனைவி பாப்பாத்தி அம்மாளுடன் வசித்து வரும் காந்தி 1980-ம் ஆண்டு தியாகிகள் பென்சனுக்காக விண்ணப்பித்துள்ளார். ஆனால் தொடர்ந்து பல முறை அவர் போராடியும் வயது வித்தியாசத்தை காரணம் காட்டி காந்திக்கு தியாகிகள் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.
இதை தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டில் காந்தி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு; தியாகி காந்தி தான் சுதந்திர போராட்ட தியாகி என்பதற்கான ஆவணங்களை தேவையான அளவு தாக்கல் செய்துள்ளார். நேஜாஜி படையில் இருந்த கேப்டன் லட்சுமி காந்திக்கு கொடுத்த சான்றிதழ்களையும் அதிகாரிகள் ஏற்கவில்லை. தன்னுடன் சிறையில் இருந்த தியாகிகளின் சான்றிதழ்களையும் காந்தி வழங்கியுள்ளார்.
இதை எதையும் ஏற்றுக் கொள்ளாமல் வயதை மட்டும் காரணம் காட்டி ஓய்வூதியத்தை வழங்க மறுத்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. அதிகாரிகள் தங்களது பொறுப்பை தட்டி கழித்துள்ளனர். துரதிருஷ்டவசமானது. இது மனுதாரருக்கு இரண்டு வாரத்திற்குள் தியாகிகள் ஓய்வூதியத்தை வழங்க வேண்டும். 1980-ம் ஆண்டு ஜூலை மாதம் அவர் விண்ணப்பித்துதான் அன்றில் இருந்து கணக்கிட்டு நான்கு வாரத்திற்குள் இந்த ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என்று நீதிபதி ரவிச்சந்திர பாபு தெரிவித்தார்.
இது தியாகி காந்திக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனது 37 ஆண்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகவே இந்த தீர்ப்பை கருதுகிறேன் என்று அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு:-
பர்மாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போசுடன் ஆங்கிலேர்களை எதிர்த்து போராடி சிறையில் இருந்துள்ள நான் தியாகிகள் பென்ஷசனுக்காக இவ்வளவு தூரம் போராடியது வருத்தம் அளிக்கிறது. இருந்தாலும் எனக்கு கிடைக்க வேண்டிய தியாகிகள் பென்ஷசனை மொத்தமாக கொடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். என்னை போல பாதிக்கப்பட்ட தியாகிகள் இருந்தாலும் அவர்களையும் கண்டறிந்து தியாகிகள் பென்ஷசன் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.