இந்திய வம்சாவளியை சேர்ந்த 10 வயது சிறுவனான மெஹுல் கார்க் மிகவும் குறைந்த வயதில் மென்ஸா அறிவுத்திறன் போட்டியில் பங்கேற்பதன் மூலம் புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளான்.
லண்டன் நகரில் நடைபெற்ற ‘மென்ஸா ஐ.கியூ.’ போட்டிக்கான நுழைவுத்தேர்வில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 10 வயது சிறுவனான மெஹுல் கார்க் மிகவும் குறைந்த வயதில் ’மென்ஸா’ அறிவுத்திறன் போட்டியில் பங்கேற்பதன் மூலம் புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளான்.
மனிதர்களின் பொது அறிவுத் திறனை மதிப்பிடும் உலகின் மிகப் பழமையான ‘மென்ஸா’ நிறுவனம் கடந்த ஆண்டு நடத்திய அறிவுக்கூர்மை (ஐ.கியூ.) போட்டிக்கான பொதுஅறிவு தொடர்பான 150 கேள்விகளுக்கு அசத்தாலாக பதிலளித்து, 162 மதிப்பெண்களை பெற்று, பிரபல அறிவியல் அறிஞர்கள் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கை விட அறிவுத்திறன் பெற்றவன் என்ற சாதனையை இந்திய வம்சாவளியை சேர்ந்த துருவ் கார்க் என்ற 13 வயது மாணவன் சாதனை படைத்திருந்தார்.
இந்நிலையில், துருவ் கார்கின் பத்து வயது தம்பியான மெஹுல் கார்க் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ’மென்ஸா’ அறிவுத்திறன் போட்டியில் பங்கேற்பதற்கான நுழைவுத்தேர்வில் 162 மதிப்பெண்கள் பெற்றதுடன் மிகவும் குறைந்த வயதில் இதில் பங்கேற்றவன் என்ற புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளான்.
சமீபத்தில் வெளியான நுழைவுத்தேர்வு முடிவுகளில் எனக்கு அதிக மதிப்பெண்கள் கிடைத்திருந்ததைப் பார்த்து என்னால் அழாமல் இருக்க முடியவில்லை என்று குறிப்பிடும் மெஹுல் இறுதிச்சுற்றுகான 100 பேர் பட்டியலில் நிச்சயமாக இடம்பெறுவான் என்று எதிர்பார்க்கலாம்.
தென்கிழக்கு லண்டனில் உள்ள வோக்கிங்ஹாம் பகுதியில் வசித்துவரும் இந்திய வம்சாவளி தம்பதியரான கவுரவ் கார்க் – திவ்யா கார்க் இளைய மகனான மெஹுல் ‘ரூபிக் கியூப்’ கனசதுர விளையாட்டை 100 வினாடிகளில் முடித்து விடக்கூடியவனாகவும் உள்ளதால் தனது அண்ணன் துருவ் கார்கைவிட எவ்வகையிலும் நான் குறைந்தவனில்லை என்று தற்போது நிரூபித்துள்ளதாக அவனது தாயார் திவ்யா கார்க் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்.
தனிமையில் வாழ்ந்து வருபவர்கள் தாங்கள் வசிக்கும் சுற்றுப்புறப் பகுதியில் தங்களைப்போல் தனியாக வாழ்பவர்களை தொடர்பு கொண்டு சந்திக்கும் வகையில் புதிய ‘ஆப்’ ஒன்றையும் துருவ் கார்க் – மெஹுல் கார்க் சகோதரர்கள் உருவாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.