முன்னாள் கடற்றொழில் பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன உள்ளிட்ட ஐவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்ட மா அதிபரால் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
பாரிய ஊழல் மோசடி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைவாக இந்த இரண்டு வழக்குகளும் நேற்று தாக்கல் செய்யப்பட்டதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.
அதன்படி பொதுச் சொத்துக்கள் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம் ஆகியவற்றின் கீழ் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், நீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி நிதிக்கு ஒதுக்கப்பட்ட ஒரு கோடியே 12 இலட்சத்து 78,000 ரூபா நிதியை மோசடி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 10 இலட்சத்து 90,000 ரூபா நிதியை பயன்படுத்தி நாட்குறிப்பு புத்தகங்கள் அச்சிட்டு விநியோகித்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக மற்றொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.